Idhayam Matrimony

2-ஜி வழக்கில் அமைச்சரின் தலையீடு குறித்து சுவாமி கடிதம்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, பிப்.23 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் தலையிடுவதாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி புகார் கூறி உள்ளார். இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடித்தில், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதை நீங்கள் அறிவீர்கள். அந்த வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பழனி மாணிக்கத்தின் தலையீடு இருப்பதாக எனக்கு தகவல் வருகிறது. பழனி மாணிக்கத்திடம் மத்திய வருவாய், வருமான வரித்துறை, கலால், சுங்கம் ஆகிய துறைகள் உள்ளன. அவற்றில் பணியாற்றும் அதிகாரிகளை பயன்படுத்தி 2 ஜி அலைக்கற்றை வழக்கில் உள்ள சாட்சிகளை பழனி மாணிக்கம் மிரட்டுவதாக தகவல்கள் வருகின்றன. 

சில சாட்சிகளின் உறவினர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் செல்வதாகவும், வருமானத்துக்கு அதிகமாக அந்த சாட்சி சொத்து சேர்த்திருப்பதாக வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பழனி மாணிக்கத்தால் மத்திய சுங்கம், கலால் துறை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுவதை இது போன்ற நடவடிக்கை காட்டுவதாக உள்ளது. இதன் மூலம் 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தாம் சார்ந்த கட்சி தலைவரின் மகள் கனிமொழிக்கு பழனி மாணிக்கம் உதவுவதாக தோன்றுகிறது. 

சாட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் 2 ஜி வழக்கின் வெளிப்படையான விசாரணையின் போக்கை மாற்றுவதே அவரது நோக்கமாக தெரிகிறது. இது போன்ற சூழ்நிலையில் உங்கள் தலைமையிலான அரசில் மத்திய இணையமைச்சராக நீடிக்க பழனி மாணிக்கம் தகுதியற்றவராகி விட்டதாக நான் கருதுகிறேன். மாற்று நடவடிக்கையாக அவரை நிதித்துறை அல்லாத வேறு பொறுப்புக்கு மாற்ற வேண்டும். தமது செல்வாக்கை தவறாக பயன்படுத்த முடியாதவாறு அந்த பொறுப்பு இருக்க வேண்டும். இவ்வாறு சுவாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்