முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டல் அதிபர் மகன் விமான நிலையத்தில் மயங்கி சாவு

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,பிப்.26 - தனது பிறந்த நாளினை கொண்டாட ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய மகன் சென்னை விமான நிலையத்தில் பெற்றோர் முன்னிலையிலேயே மாரடைப்பால் துடிதுடித்து இறந்தார்.  இந்த சோக சம்பவம் குறித்த விபரம் வருமாறு:- திருச்சி தென்னூரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் திருச்சியில் மிகப் பெரிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகன் விஷ்ணு விக்ரந்த் (30). இவர் ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை பார்க்கிறார். கடந்த 23 - ம் தேதி அவருடைய பிறந்த நாள். பிறந்த நாளைக் கொண்டாட திருச்சியில் உள்ள பெற்றோருடன் மகிழ்ச்சியாக கொண்டாட எண்ணி ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டார். 

சிங்கப்பூர் வந்த அவர் அங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 214 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த விமானம் தரையிறங்க வேண்டிய ஓடுபாதையில் ரஷ்ய நாட்டு சரக்கு விமானம் ஒன்று பழுதடைந்து பாதையில் நின்று கொண்டிருந்தது. பெரிய விமானம் என்பதால் வேறு விமானப் பாதையில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. 

எனவே இந்த விமானத்தை பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதித்தனர். ரஷ்ய விமானத்தில் பழுது நீக்கப்பட்ட பிறகு தான் அதிகாலை 1.00 மணிக்கு பெங்களூரில் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் சென்னை வந்து தரையிரங்கியது. 

விமானத்திலிருந்து மகிழ்ச்சியடன் வெளியே வந்த விஷ்ணு விக்ரந்த் வெளியே காத்திருந்த தனது பெற்றோர் மற்றும் உறவினரைப் பார்த்து கையசைத்தார்.  இடையில் அவருடைய பையை பரிசோதிக்கும் பணிகள் இருந்ததால் பரிசோதிக்கும் இடத்தில் அவர் வரிசையில் நின்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென இருமல் ஏற்பட்டு தொடர்ந்து இருமினார். திடீரென வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும் ரத்தம் கசிந்து மயக்கமானார். மகன் இருமியது, ரத்தம் கசிந்து மயக்கமானதை பார்த்துக் கொண்டே பெற்றோர் ஓடி வந்தனர். அதன் பின் விமான நிலைய மருத்துவக் குழுவினர் விஷ்ணு விக்ரந்தை பரிசோதித்தனர். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். அவருடைய உடல் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பிரசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பிறகே பெற்றோர்களிடம் ஒப்படைக்க உள்ளனர். பிறந்த நாள் கொண்டாட வந்த மகன் தங்கள் கண் எதிரிலேயே துடிதுடித்து இறந்ததை கண்ட பெற்றோர் துக்கத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்