முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர்கள் சார்பாக பிரதமருக்கு நன்றி: முதல்வர் அறிக்கை

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 23 - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்ததை வரவேற்பதாகவும், இதுதொடர்பாக உலகத் தமிழர் சார்பாக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இந்த முக்கியமான பிரச்சனையில் இந்திய அரசு பல நாட்களாகவே ஒரு தீர்க்கமான முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் ஐ.நா.வுடன் இணைந்து இந்திய அரசு பணியாற்றுமாறு வலியுறுத்தி அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்கப்படும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அந்த வகையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு பணியாற்ற வலியுறுத்தி அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழர்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் மறு குடியமர்வு செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படவில்லை என்றாலும், ஐ.நா. சபையில் அமெரிக்கா  கொண்டுவந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு செவிசாய்த்துள்ளது. இந்த பிரச்சனையில் அப்படியொரு நிலையை எடுக்கும் கட்டாயத்திற்கு இந்திய அரசு தள்ளப்பட்டது. இருந்தாலும் அவ்வாறு செவிசாய்த்ததற்கு நன்றி. இந்த பிரச்சனை தொடர்பாக பிரதமருக்கு நான் இருமுறை கடிதம் எழுதினேன். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்கும்படி வலியுறுத்தி அவருக்கு கடிதம் எழுதினேன்.  இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் ஒரு தன்னிலை விளக்கமளித்தார். அனைத்துக் கட்சிகளுடன் இந்திய அரசு அதுபற்றி பேசிவருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் லோக்சபை மற்றும் ராஜ்யசபையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வடிவம் இந்திய அரசுக்கு கிடைக்கவில்லை என்றும், அதேநேரம் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமரின் பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து பேசினார்கள். பிரதமரின் பதில் தெளிவற்று இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நானும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டேன். 

இந்த நிலையில் இலங்கை வெளியுறவு அமைச்சர், எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்புகொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்த பிரச்சனையில் இந்தியா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாக தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தெரிவித்துள்ளார்.  இதுபோன்ற குழப்பங்களுக்கு மத்தியில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசு இறுதியில் வாக்களித்திருக்கிறது என்ற செய்தி வந்துள்ளது. தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மூலமாக தமிழர்கள் சார்பாக இந்திய அரசுக்கு நான் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவந்தேன். மேலும் பிரதமருக்கு கடிதங்களும் எழுதினேன். அ.தி.மு.க. எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் கோரிக்கைகளை எழுப்பினார்கள். இவற்றுக்கெல்லாம் இப்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை தமிழர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். அதற்கான முதல் நடவடிக்கைதான் இது. அதற்காக உலகத் தமிழர்கள் சார்பாக பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்