முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் மியான்மர் செல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.- 4 - மியான்மர் நாட்டில் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூ கி அமோக வெற்றிபெற்றதை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் அந்நாட்டுக்கு விஜயம் செய்வார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சியே நடைபெற்று வருகிறது. சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலைத் தொடர்ந்து அந்நாட்டில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. என்றாலும் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் 45 இடங்கள் காலியாக இருந்துவந்தன. இந்த 45 தொகுதிகளுக்கும் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூ கியின் தேசிய லீக் ஜனநாயக கட்சி அமோக வெற்றியை பெற்றது. இந்த தேர்தலில் ஆங் சான் சூ கியும் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் பாராளுமன்றத்தில் சூ கியின் கை ஓங்கியுள்ளது. ஆங் சான் சூ கிக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக நாடுகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளன. மியான்மரில் ஜனநாயகம் வளர்ந்ததற்கு இந்நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளன. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் மியான்மர் நாட்டிற்கு வர வேண்டும் என்று அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் அடுத்த மாதம் மியான்மர் நாட்டிற்கு சென்று இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையே சமீப காலமாக நட்புறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மியான்மர் ஜனாதிபதி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை புரிந்தனர். மியான்மரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தலில் இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரிகள் இந்திய ஊடக பிரதிநிதிகள் ஆகியோர் பார்வையாளர்களாக சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்