முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வலியுறுத்தல்

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, மே. 30 - காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை வழங்க கர்நாடகம் மறுத்து வருவதாக காவிரி கண்காணிப்பு கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டம் மத்திய நீர் வளத்துறை செயலர் துருவ் விஜய்சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான தமிழக அரசின் தலைமை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, தமிழக பொதுப்பணித்துறை செயலர் சாய்குமார், கர்நாடக அரசின் தலைமை செயலர் ரங்கநாத் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தமிழகத்துக்கு கோடைக்காலங்களில் வழங்க வேண்டிய நிதி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஜுன் முதல் செப்டம்பர் மாத காலத்தில்தான் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வர். ஆனால் மழைக்காலத்தில் தமிழகத்துக்கு மழை நீரை திறந்து விடும் கர்நாடக அரசு கோடை காலத்தில் வழங்க வேண்டிய நீரை வழங்குவதில்லை என்று தமிழக அதிகாரிகள் விளக்கினர்.

காவிரி நிதி நீர் ஆணையத்தின் இடைக்கால உத்தரவின்படி தமிழகத்துக்கு கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு குறித்த விவரங்களை மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் சுட்டிக்காட்டிய விவரத்தின்படி தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருந்தது. இதையடுத்து இடைக்கால உத்தரவின் படி தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய நீர்வள துறை செயலருமான துருவ் விஜயசிங் அறிவுறுத்தினார். 

இதையடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு தலைமை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி வலியுறுத்தினார். இக்கருத்தை கர்நாடகமும் வலியுறுத்த வேண்டும் என்று அவர் அந்த மாநில அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அது குறித்து கர்நாடக அரசு அதிகாரிகள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்