முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரத்தை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.8 - 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தேர்தல் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்ய  வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பன் ப.சிதம்பரம் மீது தேர்தல் முறைகேடு வழக்கைத் தொடுத்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து, தேர்தல் முறைகேடு வழக்கை அவர் சந்திக்க வேண்டும் என்று நேற்று  தீர்ப்பு கூறியிருந்தார்.

இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, தற்போது மத்திய அரசில் உள் துறை அமைச்சராக உள்ள ப.சிதம்பரம் ஜனநாயக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றும், உண்மையிலேயே அவர் தோல்வி அடைந்த வேட்பாளர் தான் என்றும் அப்பொழுதே நான் தெரிவித்து இருந்தேன். மேலும், இதே குற்றச்சாட்டை சென்ற ஆண்டும் (2011) தெரிவித்து, சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். இந்திய ஜனநாயகத்தையே குழி தோண்டி புதைக்கும் வகையில் அமைந்துள்ள ப.சிதம்பரத்தின் தேர்தலை எதிர்த்து, அ.தி.மு.க. வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் மறுக்க முடியாத ஆவணங்களின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.   இந்தத் தேர்தல் வழக்கினை எதிர்கொள்ள அஞ்சி, அதனை காலம் தாழ்த்தும் வகையில் ப.சிதம்பரம், இந்தத் தேர்தல் வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் இடைக்கால மனுவினை தள்ளுபடி செய்து, இந்தத் தேர்தல் வழக்கினை ப.சிதம்பரம்  எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரம் மோசடியாக வெற்றி பெற்றுவிட்டார் என்பது தான் அ.தி.மு.க. நிலைப்பாடு.  இந்தக் கிரிமினல் குற்றச்சாட்டினை  சிதம்பரம் நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்ற இன்றைய நிலையில், இவர் மத்திய உள் துறை அமைச்சராக இனியும் பொறுப்பு வகிப்பது இந்திய ஜனநாயகத்திற்கே ஒரு களங்கமாக அமைந்துவிடும்.  

எனவே, தேர்தல் முறைகேடு என்ற ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மத்திய உள் துறை அமைச்சர்  ப.சிதம்பரம் இனியும் காலம் தாழ்த்தாது தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  சிதம்பரம் அவ்வாறு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லையென்றால், உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில்,  பாரதப் பிரதமர்  சிதம்பரத்தை அமைச்சரவையிலிருந்து உடனடியாக க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்