முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1006- ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்

திங்கட்கிழமை, 18 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன் - 18 - இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவேற்காட்டில் இன்று 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்​ அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார். இந்த திருமண விழா இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் நடைபெறுகிறது. இதற்காக கோவில் அருகே பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. 1006 புது மண ஜோடிகளும் இன்று காலை பந்தலில் அமர வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முதல்​ அமைச்சர் ஜெயலலிதா 4 கிராம் தங்கத்தாலியுடன் கூடிய மாங்கல்யத்தை இலவசமாக வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். 6 கிராம் வெள்ளி மெட்டியும் வழங்குகிறார். முன்னதாக மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு ஜரிகை வேட்டி, துண்டு, சட்டையும் வழங்கப்படுகிறது. சீர் வரிசையாக பித்தளை காமாட்சியம்மன் விளக்கு, குங்குமச்சிமிழ், குடம், வாளி, தட்டு, டம்ளர், பாத்திரங்கள், கரண்டிகள், பாய், தலையணை போர்வை உள்பட 21 பொருட்கள் அடங்கிய சீர் வரிசை பொருட்களையும் முதல்​ அமைச்சர் ஜெயலலிதா மணமக்களுக்கு வழங்குகிறார். விழாவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை தாங்குகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வாழ்த்துரை வழங்குகிறார். தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்க செய்தி துறை செயலாளர் ராஜாராம் நன்றி கூறுகிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முக்கிய பிரமுகர்கள் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 1006 ஜோடி திருமணம் நடைபெற உள்ள பந்தல் முகப்பு தோற்றம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. மணமக்களுக்கு வழங்க இருக்கும் சீர்வரிசை பொருட்களும் நேற்றே  திருவேற்காடுக்கு கொண்டு வரப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா திருவேற்காடு செல்வதையொட்டி சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் , அமிஞ்சிக்கரை, கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், திருவேற்காடு வரை வழி நெடுக கொடி, தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மாதவரம் மூர்த்தி, அமைச்சர் ரமணா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதாவை வரவேற்க சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்