முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உர விலை நிர்ணயம்: மத்தியரசின் கொள்கைக்கு கண்டனம்

புதன்கிழமை, 27 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 28 - மத்திய அரசின் ஊட்டச்சத்து அடிப்படையில் மானியம் வழங்கும் திட்டத்தால் உர விலை உயர்ந்து வருவதால் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய கொள்கையை உடனடியாக அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் , நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருக்கிறார்..மேலும் தமிழகத்திற்கு உரத்தை வழங்க பிரதமர் தலையிட்டு மத்திய ரசாயன உரத் துறைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு விவசாயிகளின்  நலனை பாதுகாப்பதற்காக ஆழ்ந்த வேதனையுடனும், கவலையுடனும் இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.

ஊட்டசத்து சார்ந்த உரமானிய கொள்கையை மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ம் தேதி அறிமுகப்படுத்தியது. அது முதல் தமிழகத்துக்கு அளிக்கப்படும் உரங்களின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது.இது விவசாயிகளின் அடிப்படை தேவைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 28 லட்சம் டன் ரசாயன உரங்கள் தமிழகம் கொள்முதல் செய்கிறது.

ஊட்டசத்து சார்ந்த உரமானிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதால், ரசாயன உரங்களுக்கு உற்பத்தி செலவு அல்லது இறக்குமதி செலவு அடிப்படையில், அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரம் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ரசாயன உர நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல் சில்லரை விலையை உயர்த்தின. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரிதும் இன்னல்கள் ஏற்பட்டது. ஊட்டசத்துக்கு சார்ந்த உரமானிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பல்வேறு உரங்களின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்து விட்டது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அவற்றின் விலை மேலும் உயர்ந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 முதல் ஜூன் 18ந் தேதி வரை உள்ள காலகட்டத்தில் உர விலையில் ஏற்பட்டுள்ள உயர்வை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் விற்பனை செய்யும் 50 கிலோ எடை கொண்ட டிஏபி, எம்ஓபி ஆகியவற்றின் விலை ரூ.910லிருந்து ரூ.1200 ஆகவும், ரூ.680லிருந்து ரூ.840 ஆகவும் முறையே உயர்த்தப்பட்டன.

2010 ஆம் ஆண்டுக்கு பிறகு 50 கிலோ எடை கொண்ட டிஏபி (ஐபிஎல்) விலை ரூ.486.20லிருந்து ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது (244 சதவீதம் உயர்வு). 50 கிலோ கொண்ட எம்ஓபி (ஐபிஎல்) விலை ரூ.231.66லிருந்து ரூ.840 ஆக உயர்ந்துள்ளது (363 சதவீதம் உயர்வு).

50 கிலோ எடை கொண்ட காம்ப்ளக்ஸ் உரம் 10:26:26 (இப்கோ) ரூ.374.24லிருந்து ரூ.1110ஆக உயர்ந்துள்ளது (297 சதவீத உயர்வு).

50 கிலோ எடை கொண்ட காம்ப்ளக்ஸ் 20:20:0:13 (கிரீன் ஸ்டால்) ரூ.327.40லிருந்து ரூ.858.76 ஆக உயர்ந்துள்ளது (262 சதவீத உயர்வு).

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இத்தகைய கடும் விலை உயர்வு ஏற்பட்ட போது, மத்திய அரசின் ரசாயன உரத்துறை 2012​13 ஆம் ஆண்டுக்கு மானியத்தை கணிசமாக குறைத்தது.

டி.ஏ.பி. உரத்துக்கு 2011​12​ல் டன் ஒன்றுக்கு ரூ.19,763 மானியம் அளிக்கப்பட்டது. 2012​13​ல் இந்த மானிய தொகையை ரூ.14,350 ஆக உரத்துறை குறைத்துள்ளது. எம்.ஓ.பி. உரத்துக்கான மானியம் ரூ.16,054​ல் இருந்து ரூ.14,400 ஆக மத்திய அரசு குறைந்துள்ளது. மேலும் யூரியா விலையை கூடுதலாக 10 சதவீதம் அளவுக்கு உயர்த்தவும், உயிரி உரத்திற்கு மானியம் வழங்குவது என்ற போர்வையில் மற்ற உரங்களுக்கான மானியத்தை குறைக்க .உரத்துறை திட்டமிட்டு இருப்பதாக நான் அறிகிறேன்.

.. . விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில், தமிழகத்தில் உர விற்பனை மீதான 4 சதவீத வாட் வரியை ரத்து செய்தேன். ரசாயன உரங்கள், இயற்கை உரங்கள், ச்சிக் கொல்லி போன்றவற்றின் மீதான வாட்வரி, 2011, ஜூலை 12ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது.

உரத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், உரத்தின் மீதான மானியம் குறைக்கப்பட்டதால் எழுந்துள்ள இக்கட்டான நிலையில் விவசாயிகள் போட்ட முதலீடு கிடைக்காத நிலையில் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.  விவசாயத்தில் லாபம் என்பதே பார்க்க முடியாது. விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில், தமிழகத்தில் உர விற்பனை மீதான 4 சதவீத வாட் வரியை ரத்து செய்தேன், 2011 ஜூலை 12 முதல் ரசாயன உரங்கள், இயற்கை உரங்கள், ச்சிக் கொல்லி மருந்துகள் ,  ஆகியவற்றின் மீதான 4 சதவீத வாட் வரி விலக்கு அமல்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது. மத்திய அரசால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சுமையை குறைக்கவும் அவர்களை பாதுகாக்கவும் நான் நடவடிக்கை எடுத்தேன்.    இதனால் விவசாயிகளுக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது., மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளால் உரங்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.உரங்களுக்கான விலை நிர்ணயம், மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை சார்ந்து இருப்பதால், ஊட்டச்சத்து சார்ந்த உரக் கொள்கை உடனடியாக திரும்ப பெறவேண்டும். ஏற்கனவே இருந்த நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை வழங்கும் திட்டத்தை ,நிலையான விலை நிர்ணயம் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். உழவர்களை காக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்..   இல்லையென்றால் விவசாயத்தில் முற்றிலும் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டு, ஏராளமான நிலங்கள் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகும். போதுமான அளவுக்கு, உரிய நேரத்தில் ரசாயன உரங்களை வழங்குவது அவசியம். இதில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

விவசாயத்திற்கு உரம் இன்றியமையாதது. 2011 ஆம் ஆண்டு கரீப் பருவத்தில் 1.1 லட்சம் மெட்ரிக் டன் எம்ஓபி உர பற்றாக்குறை ஏற்பட்டது. 2011 ஆகஸ்ட், நவம்பர் சம்பா பருவத்தின் போது தமிழகத்தில் டிஏபி மற்றும் யூரியா உரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. டிஏபி 33,967 மெட்ரிக் டன்னும், யூரியா 1.37 லட்சம் மெட்ரிக் டன்னும் பற்றாக்குறை ஏற்பட்டது.

இத்தகைய இக்கட்டான நிலையிலும் என்னுடைய அரசு மேற்கொண்ட உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட திறமையான நடவடிக்கையின் காரணமாக 2011​2012ல் 103.85 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போதும் ரசாயன உர சப்ளை கவலை அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. ஏப்ரல் முதல் மே வரை டிஏபியின் தேவை 48 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால் உர நிறுவனம் 20,603 மெட்ரிக் டன் மட்டுமே சப்ளை செய்தது. இதில் 27,397 மெட்ரிக் டன் பற்றாக்குறை ஏற்பட்டது.

2012 ஜூன் மாதம் டிஏபி உரம் 23 ஆயிரம் மெட்ரிக் டன் சப்ளை செய்யப்பட்டது. ஆனால் தேவை 30 ஆயிரம் மெட்ரிக் டன். ஏற்கனவே குறுவை சாகுபடி துவங்கி விட்டதால் தமிழகத்திற்கு தேவையான அளவுக்கு டிஏபி உரத்தை வழங்க வேண்டுமென்று நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

வேளாண் சமூகத்தை பாதுகாக்கவும், நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிபடுத்தவும் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த சத்து அடிப்படையிலான மானிய கொள்கையை உடனடியாக திரும்ப பெற்று ஏற்கனவே இருந்த முறையை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

தமிழக விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான அளவுக்கு ரசாயன உரங்களை வழங்குவதற்கு மத்திய ரசாயன துறைக்கு உடனடியாக தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இப்பிரச்சனையில் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்