முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்னாடகாவிலிருந்து நடிகர்களை கொடுத்ததை போல்காவிரியில் தண்ணீரையும் கொடுங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.- 2 - கர்னாடகாவிலிருந்து தமிழ் நாட்டுக்கு நடிகர், நடிகைகளை கொடுத்ததை போல் காவிரி தண்ணீரையும் கொடுங்கள் என்று நேற்று நடந்த பட விழாவில் இயக்குனர் அமீர் கூறினார். விஷ்வாஸ் யுலாட்- வி.புருஷோத்தமா இணைந்து தயாரிக்கும் படம் பாகன். இந்த படத்தை அஸ்லம் இயக்கி உள்ளார். ஸ்ரீகாந்த்- ஜனனி ஐயர் நடித்து உள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து இருக்கிறார். படபிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் கரு பழனியப்பன், பிரபுசாலமன், ஜெகன்நாத், சுசீந்திரன், சமுத்திரகனி, அமீர், நடிகர் ஜெயம் ரவி, நடிகைகள் சுஜா, நமீதா, கர்னாடக எம்.பி.- அனில் யுலாட், எம்.எல்.ஏ.- விஸ்வாஸ் யுலாட், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், படத்தின் நடிகர், நடிகைகள் என பலர் கலந்து கொண்டனர். அமீர் இசைத்தட்டை வெளியிட, மேடையில் இருந்த பிரபலங்கள் இணைந்து பெற்றுக் கொண்டனர். பின்னர் கர்னாடக எம்.எல்.ஏ.- விஸ்வாஸ் யுலாட் பேசியதாவது:- கன்னடத்தில் என்னோட பிரதர் புருஷோத்தமா அதிக படங்களை தயாரித்திருக்கிறார். தமிழில் நாங்கள் தயாரிக்கும் முதல் படம் பாகன். தமிழ் சினிமாவில் கன்னடத்திலிருந்து ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் உருவாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பிரபலமடைந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்களுக்கு தமிழ் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு ரஜினிகாந்த், அர்ஜுன் என பல நடிகர்களை நாங்கள் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பை போல எங்களுக்கும் கொடுக்க வேண்டும். இங்கே மற்ற மாநிலத்தவர்களுக்கு நல்ல மதிப்பு அளிக்கப்படுகிறது. சினிமா தொழிலும் நல்ல வளமாக இருக்கிறது. தேவையற்ற பிரச்சினைகள் இல்லை என்று கூறினார்.
இவருக்கு அடுத்ததாக பேசிய அமீர் கூறியதாவது:- என்னோட உதவியாளர் அஸ்லம் இயக்கியுள்ள படம் பாகன். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்கிரிப்டை என்னிடம் சொல்லி நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். நான் மறுத்துவிட்டு, இதற்கு பொருத்தமான ஒரு ஹீரோவை தேடுவோம் என்று கூறிவிட்டேன். அதற்கு பிறகு வேறு ஒரு புதுமுகத்தை தேடி, அந்த நடிகரின் அப்பாவே தயாரிப்பதாக இருந்திருக்கிறது. இந்த விஷயம் எனக்கு தெரியாது. பிறகு திட்டமிட்டதுபோல படபிடிப்பும் தொடங்கியிருக்கிறது. அதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு படபிடிப்பு தடைபட்டது. அதை நான் தான் பஞ்சாயத்து செய்து வைத்தேன். அப்போது அஸ்லாமிடம் இந்த ஸ்கிரிப்டை அப்படியே தூக்கி வை. இந்த கதைக்கு பொருத்தமான ஹீரோ நீ பார்த்திருக்கும் புதுமுகம் கிடையாது என்று கூறினேன்.
அந்த நேரத்தில் ஒரு விழாவில் நடிகர் ஸ்ரீகாந்தை சந்தித்தேன். இந்த சைக்கிள் கதையை அவரிடம் கூறியபோது, நடிப்பதாக ஒத்துக்கொண்டு தற்போது நடித்திருக்கிறார். ஒரு ஹீரோவுக்கு நல்ல ஸ்கிரிப்ட் தேவை. அது கிடைக்கவில்லை என்றால் ஜெயிக்க முடியாது. அது இப்போது ஸ்ரீகாந்திற்கு கிடைத்திருக்கிறது. படமும் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்த படம் வெற்றிப் படமாக அமையும். இங்கே ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். எனக்கு முன்பு பேசிய கர்னாடக எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், உங்களுக்கு கர்னாடகாவிலிருந்து ரஜினியை கொடுத்திருக்கிறோம், அர்ஜுனை கொடுத்திருக்கிறோம் என்றார்கள். இன்னும் எத்தனையோ நடிகர், நடிகைகளை கர்னாடகாவிலிருந்து கொடுங்கள். நாங்கள் வரவேற்கிறோம். அவர்களை தமிழர்கள் அன்பாகத்தான் பாவிப்பார்கள். இதுவரை அப்படித்தான் அரவணைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் கர்னாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு நடிகர், நடிகைகளை கொடுத்ததை போல காவிரி தண்ணீரையும் கொடுங்கள். உங்கள் சட்டமன்றத்தில் இதுபற்றி பேசுங்கள். நாங்கள் எந்தளவுக்கு உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதை நேரில் பார்க்கிறீர்கள். இதை எடுத்துச் சொல்லுங்கள். இவ்வாறு அமீர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்