முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சிகோவில் பொற்றாமரை குளத்தில் மண்நிரப்பும் பணிதுவங்கியது

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, செப். - 3 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் பொற்றாமரைகுளத்தில் நிரந்தரமாக தண்ணீரை தேக்கி வைக்கும் பொருட்டு களிமண் நிரப்பும் பணி தொடங்கியது.  பொற்றாமரை குளம் புராதன பெருமை பெற்றது. இங்கு நக்கீரருக்கு முக்தி கிடைத்தது உள்ளிட்ட பல்வேறு புராண திருவிளையாடல்கள் நிகழ்ந்துள்ளன. இக்குளத்தில் மீன்கள் உள்ளிட்ட எவ்வித உயிரினமும் இருப்பதில்லை என்பது இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இக்குளம் சுமார் 140 அடி நீளம், 90 அடி அகலம் உடையதாக இருக்கும்.  இதில் நிரந்தரமாக நீரை நிரப்ப வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதில் பல நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது. குளத்தின் கரைகளில் உள்ள மண்டப தூண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைகருத்தில் கொண்டு நீர் நிரப்புவதை தீர்மானிக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.  அதனடிப்படையில் கோயில் செயல் அலுவலர் ஜெயராமன் பரிந்துரையில் குளத்தில் நீர் நிரப்புவது தொடர்பாக இந்திய தொழில்நுட்ப மையம் சென்னை கிளை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் படி குளத்தில் 4 அடி உயரம் வரை நீர் நிரப்பலாம் என்றும் அந்த நீர் கீழிறங்காமல் இருக்க தண்ணீர் புகா விரிப்பை பயன்படுத்தலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து குளத்தில் களிமண் நிரப்பிட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கின.  கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் முன்னிலையில் ரூ. 30 லட்சம் செலவில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கீழமாத்தூர் கண்மாய் களிமண் நிரப்புவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி டிப்பர் லாரியில் சுமார் 150 லோடு மண் கொண்டு வரப்பட்டு குளத்தின் 2 அடி உயரத்துக்கு களிமண்ணை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் ஜெயராமன் முன்னிலையில் கோயில் பொறியாளர் குமரன் ஆலோசனையில் நடைபெற்றது. இப்பணி ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்று கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. அதே போன்று ரூ. 50 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ள பொற்றாமரை குளத்தின் தெற்கு பிரகார மண்படத்தின் மேற்கூரையில் புதிகாக கற்கள் பதிக்கும் பணியும் விரைவில் நிறைவு பெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்