முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் பற்றாக்குறையை சமாளிக்க துரித நடவடிக்கை

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.5 - தமிழகத்தில் இம்மாத இறுதியில் காற்றாலைகள் மூலம் செய்யப்படும் மின்சாரம் உற்பத்தியின் அளவு குறையும்போது, ஏற்படும் மின்பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்து வருகிறது.தேவையை விட உற்பத்தி குறைவு

தமிழகத்துக்கு தேவைப்படும் மின்சாரம் அனல்மின் நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் உள்பட பல்வேறு வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது.

இதுகுறித்து மின்சாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-​

மத்திய அரசின் மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்ததுடன், தமிழகத்தில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களிலும் மின்சார உற்பத்தி குறைந்ததால் மின்தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஆனால் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தேவையை விட உற்பத்தி குறைந்துள்ளதால் மின்தடை செய்து ஓரளவு நிலமை சரி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாகவும், காற்றாலை மூலம் போதிய மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாலும் நகர் புறத்திலும், கிராமப்புறத்திலும் நேற்று மின்தடை நேரம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டு மற்றும் நீர்நிலைகள் மூலம் கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பெய்த காலகட்டத்தில் 214 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

ஆனால் தற்போது நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் ஜூன் முதல் செப்டம்பர் வரை 85 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் 129 கோடி யூனிட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டதன் மூலம் சராசரியாக 60 சதவீதம் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காற்றாலைகள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 500 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடப்பாண்டு மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 750 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஆக தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் நீர்நிலைகள் மூலம் உற்பத்தி செய்யாத மின்சாரத்தை, ஓரளவு காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்ததால் நிலமை ஓரளவு சீர்செய்யப்பட்டது.

செப்டம்பர் இறுதியில் மழை நின்றுவிட்டால் காற்றாலைகளிலும் மின்சார உற்பத்தி குறைந்து விடும். பிறகு சுமார் இரண்டு வாரங்களுக்கு பிறகு தான் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை பெய்யும். அந்த காலகட்டத்தில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படும்.

தென்மேற்கு பருவ மழைக்கும், வடகிழக்கு பருவ மழைக்கும் இடைப்பட்ட இரண்டு முதல் மூன்று வாரத்திற்கு மின்சார நிலமையை சமாளிக்க அதாவது செப்டம்பர் கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் முதல் இரண்டு வாரங்களுக்கு தேவையான மின்சாரத்தை சமாளிக்க போர்க்கால நடவடிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்து வருகிறது. குறிப்பாக மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவை முறையாக வழங்கினாலே போதும். ஆனால் அவர்களும் பாராமுகமாக உள்ளனர். இருந்தாலும் நிலமையை சமாளிக்க மத்திய தொகுப்பை நாடுவதை தவிர வேறுவழியில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்