முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு நடக்காது: எஸ்.ஏ.சந்திரசேகர்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.26 - திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு நடக்காது என்று எஸ்.ஏ.சந்திரசேகரும், நடந்திடும் என்று கே.ஆரும் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அனைத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் உறுப்பினர்களுக்கும் வணக்கம். வருகின்ற 28.10.2012 (ஞாயிறு) சென்னை கோயம்பேடு 100 அடி சாலையிலுள்ள ராதா பார்க் கின் ஓட்டலில் நமது சங்கம் அறிவித்தது போல ஒரு போலியான சிறப்புக் கூட்டம் நடக்கவிருப்பதாக ஒன்பது உறுப்பினர்கள் கையெழுத்திட்டு 6.10.2012 அன்று பத்திரிகைகளிலும் மறுநாள் சுற்றறிக்கைகளிலும் அறிவித்திருந்தார்கள். 

ஆனால் அந்தக் கூட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சங்க சட்டத்தில் இடமில்லை என்றும் சிட்டி சிவில் கோர்ட் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதையும் மீறி யாராவது அத்தகைய கூட்டம் நடத்தினால் அவர்கள் மீது நமது சங்க சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் கடந்த 9.10.2011 சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று நமது நிர்வாகம் பதவி ஏற்று சேவை மனப்பான்மையுடன் செயல்பட ஆரம்பித்தோம். ஆனால் ஆரம்பம் முதலே தேர்தலில் தோற்றவர்கள் பல விதத்திலும் சங்க செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார்கள். 

கடந்த நிர்வாகத்தினரின் தூண்டுதலாலும் சில சுயநலவாதிகளின் தூண்டுதலாலும் சங்கத்தில் நமக்குள் இருந்த ஒற்றுமையை குலைத்து பலர் பதவிகளை ராஜினாமா செய்து அட்-ஹாக் கமிட்டி ஒன்றை நியமித்து எங்களை பதவி நீக்கம் செய்தனர். 

வேறு வழியின்றி நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி அட்- ஹாக் கமிட்டி செல்லாது என்ற தீர்ப்பு கிடைத்தபின் மீண்டும் நிர்வாகத்திற்கு வந்தோம். 

இதனால் இரண்டு மாதமாக சங்கத்திற்கு வந்து கொண்டிருந்த கேபிள் டி.வி. வருமானம் 30 லட்ச ரூபாயை வரவிடாமல் செய்து விட்டார்கள். நமக்கும் தொழிலாளர் அமைப்புக்கும் நடக்கவிருந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தையும் நிறைவேற விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள். 

மேலும் கடந்த நிர்வாகம் இதுவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நமது சங்கத்திற்கும் ரிஜிஸ்டர் ஆப் சொசைட்டி அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளாமல், இடைப்பட்ட காலங்களில் நடந்த தேர்தல் மாற்றங்களை தெரிவிக்காமலும், சரியான உறுப்பினர்களின் எண்ணிக்கையை பதிவு செய்யாமலும், கடந்த பல ஆண்டுகளின் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்காமலும் ரிஜிஸ்டர் ஆப் சொசைட்டிக்கும் நமக்கும் உள்ள உறவை முழுவதுமாக துண்டித்து விட்டனர். 

இப்போது மீண்டும் உறுப்பினர்கள் சரி பார்க்கும் பணி முழுவீச்சுடன் நடந்து கொண்டிருக்கிறது. அதை சரி பார்த்தபின் ரிஜிஸ்டர் ஆப் சொசைட்டியில் பதிவு செய்து கணக்குகளையும் தாக்கல் செய்து அதற்குப் பிறகு ரிஜிஸ்டர் ஆப் சொசைட்டியின் ஒப்புதலுடன் முறைப்படி பொதுக்குழு கூட்டப்படும். 

அப்படி கூட்டப்படுகின்ற பொதுக்குழுவில் முன்கூட்டியே தேர்தல் நடக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் அதுபற்றி பொதுக்குழுவில் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கிறோம். 

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்