முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனதுபுகழை கெடுக்க காங்கிரஸ் சதித்திட்டம் தக்கபதிலடி கொடுப்பேன்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, நவ. - 1 - எனது புகழை கெடுக்க காங்கிரஸ் கட்சி சதித் திட்டம் தீட்டுகிறது. அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் என்று பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலராக இருந்து ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை தொடங்கி அரசியல்வாதியாக மாறியிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் தலைவர்கள் மீதெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி ஒரு கலக்கு கலக்கி வருகிறார். சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா முதல் ஒவ்வொரு தலைவர்களுக்கும் எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் இவர் விட்டு வைக்கவில்லை. அது மட்டுமல்ல, பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால் தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் நிதின் கட்காரி. அது பற்றி விசாரணை நடத்தினால் சந்திக்க தயார் என்றும் அவர் ஏற்கனவே சவால் விடுத்தார். இந்த நிலையில் நேற்று மும்பையில் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் மீண்டும் கூறியதாவது, எனது புகழை கெடுக்க காங்கிரஸ் கட்சி சதித் திட்டம் தீட்டுகிறது. அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன். எந்தவொரு விசாரணையை சந்திக்கவும் நான் தயார். ஆனால் ராபர்ட் வதேரா மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அது பற்றி விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சி தயங்குவது ஏன்? தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சர்ச்சைக்குரிய ராஜ்யசபை எம்.பி. அஜய் சஞ்செட்டி ஆகியோருடன் எனக்கு வர்த்தக தொடர்பு இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருப்பதை மறுக்கிறேன். அவர்களோடு எனக்கு எந்த தொடர்பும் இல்லை. என் புகழையும், பா.ஜ.க.வின் புகழையும் களங்கப்படுத்தவே காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டுகிறது. என்னுடைய மனசாட்சி தெளிவாக உள்ளது. விதர்பாவில் விவசாயிகளின் நலனுக்காவே அவர்களின் மேம்பாட்டுக்காகவே நான் சமூக அமைப்பை நடத்தி வருகிறேன். பா.ஜ.க.வுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் நான் செய்து விடவில்லை. நான் எதற்கும் அஞ்சப் போவதும் இல்லை. 2014 பொதுத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும். தே.ஜ. கூட்டணி அரசு அமையும். பா.ஜ.க தலைவர்களில் ஒருவர் பிரதமராவார். அதை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே எதிரிகள் சூழ்ச்சி செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஒரு ஊழல் கட்சி. அந்த கட்சி மக்களை குழப்பப் பார்க்கிறது. எங்கள் தொண்டர்களையும் குழப்ப முயற்சிக்கிறது. நான் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணையை சந்திக்க தயார். நான் எந்த அரசிடம் இருந்தும் நிலமோ, பணமோ பெறவில்லை. என்னுடைய அரசியல் பதவியை தவறாக பயன்படுத்தவும் இல்லை. எந்த விசாரணைக்கும் தயார். ஆனால் காங்கிரஸ்தான் தயங்குகிறது. ராபர்ட் வதேரா மீதான புகார் மீது விசாரணை நடத்த அவர்கள் தயங்குவது ஏன்? இவ்வாறு கட்காரி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்