கசாப் ஊருக்கு சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம்

சனிக்கிழமை, 24 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

லாகூர், நவ. 24 - பத்திரிகையாளர்கள் மற்றும் டி.வி கேமிராமேன்களை கசாப்பின் ஊருக்குள் நுழைய விடாமல் செக்யூரிட்டி ஏஜென்ஸி ஆட்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் கேமிராக்களையும் பறிக்க முயன்றுள்ளனர்.

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் ஏர்வாடா சிறையில் தூக்கிலிட்டப்பட்டான். இந்த தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் டி.வி கேமராமேன்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசாப்பின் சொந்த ஊரான பரித்கோட்டுக்கு சென்றனர்.

ஆனால் அங்கு சாதாரண உடையில் இருந்த செக்யூரிட்டி ஏஜென்ஸி ஆட்கள் மீடியாக்காரர்களை ஊர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். மேலும் பாதுகாவலர்கள் செய்தி சேனல்களின் கேமராமேன்கள் வைத்திருந்த கேமிராக்களை பறிக்க முயன்றதோடு அவர்களைப் பிடித்து தள்ளி விட்டுள்ளனர்.

இது குறித்து ஒரு முன்னணி ஆங்கில நாளிதழின் நிருபர் கூறுகையில்,

கிராமத்தினர் போன்று சாதாரண உடையில் இருந்த செக்யூரிட்டி ஏஜென்ஸி ஆட்கள் கசாப்பின் ஊருக்கு செல்லும் வழியில் நின்றனர். அவர்கள் எங்களை திரும்பிப் போகுமாறு கூறினர். மேலும் பாகிஸ்தானை அவமானப்படுத்த முயல வேண்டாம் என்றும் தெரிவித்தனர். எக்ஸ்பிரஸ் நியூஸ், சேனல் 5 மற்றும் அப்னா டிவி ஆட்களின் கேமராக்களை பறிக்க முயன்றதோடு கசாப் ஊருக்குள் போவோம் என்று தெரிவித்தவர்களை அவர்கள் தள்ளிவிட்டனர் என்றனர்.

எக்ஸ்பிரஸ் நியூஸ் நிருபர் இது குறித்து அம்மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்ததற்கு அவரோ கசாப் மரணத்தால் கிராமத்தினர் கோபமாக இருக்கின்றனர். அதனால் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். கசாப் கடந்த 1987ம் ஆண்டு பரித்கோட் விவசாய கிராமத்தில் பிறந்தான். அவனது தந்தை தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை விற்று வந்தவர். கசாப் குழந்தையாக இருக்கையில் அவனுக்கு பாலிவுட் படங்கள் மற்றும் கராத்தே ஆகியவை மிகவும் பிடிக்கும் என்று அவனது அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: