முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் மீனாட்சி அம்மன் தேரோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஏப்.18 - மதுரையில் மீனாட்சி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சியும், சுந்தரேசுவரர் ப்ரியாவிடையும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு பூப்பல்லக்கில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். இதை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு சுந்தரேசுவரர், ப்ரியாவிடை பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.  கீழமாசிவீதியில் தேரடி வீதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தோடு தேர் வடத்தை பிடித்து இழுக்க சரியாக 6 மணிக்கு பெரிய தேர் புறப்பட துவங்கியது. இதை தொடர்ந்து மீனாட்சி தேர் புறப்பட்டது. சம்போ ஹர,ஹர மகாதேவா, மீனாட்சி சுந்தரர் என்ற விண்ணைப்பிளக்கும் பக்தர்களின் கோஷத்துடன் தேர் இழுக்கப்பட்டது.

     சம்ஹார கோலத்தில் சுவாமி தேரில் அமர்ந்து இருந்தார். 4 மாசி வீதிகளையும் இரண்டு தேர்களும் வலம் வந்து காலை 11 மணிக்கு  தேர் நிலைக்கு வந்தடைந்தது. மாசி வீதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காட்சியளித்தது. மதுரை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இன்றுடன் மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.  நிறைவு நாளான இன்று உச்சிக்காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தம், தேவேந்திர பூஜை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி, ப்ரியாவிடை ரிஷபவாகனத்திலும், மீனாட்சி அம்மன் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளுகிறார்கள். இரவு 9 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் முருகனும், பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டுச்செல்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்