ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் புதுச்சேரி கவர்னருக்கு நெருக்கடி முற்றுகிறது

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
hasan ali khan

புதுடெல்லி, ஏப்.- 19 - கறுப்புப்பண முதலை என்று வர்ணிக்கப்படும் ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்த விவகாரத்தில் புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்கிற்கு நெருக்கடி முற்றுகிறது. இதனிடையே ஹசன் அலி விவகாரம் தொடர்பாக புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்கிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த தடையேதும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகமும் தெரிவித்துவிட்டது. முன்னதாக ஹசன்அலிக்கு பாஸ்போர்ட் வழங்க உதவி செய்தது தொடர்பான குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்ததை இக்பால் சிங் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் வெளியே வந்து நிருபர்களை சந்தித்த புதுவை கவர்னர் இக்பால்சிங், நிருபர்களிடமும் தான் பரிந்துரை செய்த விவகாரத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என்று இக்பால் சிங் கூறினாராம். இதனிடையே இக்பால் சிங் கவர்னராக இருப்பதால் அவரிடம் எத்தகைய விசாரணை நடத்துவது? அதற்கான நெறிமுறைகள் என்ன என்பது குறித்து உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை வகுத்து வெளியிடுவார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து புதுவை கவர்னர் இக்பால் சிங்கிற்கு நெருக்கடி முற்றுகிறது. ஆனால் தாம் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் இக்பால் சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்: