முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எருக்கஞ்சேரியில் கள்ள நோட்டுகளுடன் 3 பேர் கும்பல் கைது

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

பெரம்ர், ஜன. 20 - ​ சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரியில்  கள்ள நோட்டுகளுடன் 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் வடமாநிலங்களை சேர்ந்த கள்ள நோட்டு கும்பலை கைது செய்தனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை இவர்கள் நாடு முழுவதிலும் புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அங்கு அச்சடிக்கும் கள்ள நோட்டுக்களை இந்திய இளைஞர்கள் மூலமாகவே புழக்கத்தில் விட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.

இதன்பிறகு கள்ள நோட்டு வேட்டையை தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரப்படுத்தினர். கட்டிட தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் போல ஊடுருவி கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட வாலிபர்கள் அணி அணியாக கைது செய்யப்பட்டனர். சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் கள்ள நோட்டுகளை மாற்றிய வெளிமாநில வாலிபர்களும் போலீசில் சிக்கினர்.

இதன்பிறகு ஓரளவுக்கு கள்ள நோட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டாலும், புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டுகள் ஆங்காங்கே பொதுமக்களிடம் சிக்கி குழப்பத்தை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் அலுவலக உணவகத்திலும் கள்ள நோட்டு சிக்கியது. 500 ரூபாய் நோட்டுகளே அதிக அளவில் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

இதனால் ஒரு சில கடைகளில் 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு கூட தயக்கம் காட்டினர். அந்த அளவுக்கு கள்ள நோட்டுகளின் ஆதிக்கம் சென்னையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில்எருக்கஞ்சேரி பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் அங்கு விரைந்து சென்றார்.

பின்னர் எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் கோவி.மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் குணவர்மன், சம்பத் ஆகியோருடன் அவர் மூலக்கடை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வேகமாக வந்த காரை போலீசார் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டிச் சென்று காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்களில் 3 பேர் தப்பி விட்டனர். இஸ்மாயில் என்பவர் மட்டும் சிக்கினார். காரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இஸ்மாயிலை கைது செய்து விசாரணை நடத்தினர். கொடுங்கையூர் சிவசங்கரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அவர் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டுக்கு போலீசார் அதிரடியாக சென்று சோதனையிட்டனர்.

அங்கிருந்த ரபீக் என்பவர் கல்லால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பி ஓடிவிட்டார். அந்த வீட்டில் இருந்து ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர். அனைத்தும் ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளாகும். வீட்டில் இருந்த விலை உயர்ந்த டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்னன.

இதைத் தொடர்ந்து மண்ணடியில் உள்ள ஒரு வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியதில்  மண்ணடி பகுதியைச் சேர்ந்த  முன்னாவு, வாசிம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் லட்சக்கணக்கான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என தெரிகிறது.

இந்த கள்ள நோட்டுகள் வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பி ஓடிய ரபீக்கை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் ஏற்கனவே ஒருமுறை கள்ள நோட்டு வழக்கில் சிக்கியவர். கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிய கள்ளநோட்டு கும்பல் தலைவன் முகமது ரபீக்கை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் யாரேனும் செயல்பட்டுள்ளார்களா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்