மும்பை -டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரசில் திடீர் தீ விபத்து

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா

புதுடெல்லி, ஏப்.- 19  - மும்பையில் இருந்து டெல்லி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இந்த தீ விபத்து 3 பெட்டிகளுக்கு பரவியது. ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று மும்பையில் இருந்து டெல்லியை நோக்கி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் என்ற இடத்திற்கு அருகே அந்த ரயிலில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அந்த தீ மள மளவென பரவி 3 பெட்டிகளை சூழ்ந்தது. தீப்பிடித்த உடனே அந்த ரயிலின் டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்திவிட்டார். இதனால் அந்த ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேறி உயிர்தப்பினர்.
ததவலறிந்ததும் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைத்தனர். மீட்புப் படையினரும் விரைந்துவந்து ரயில் பெட்டிகளில் இருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் அனில்குமார் சக்சேனா தெரிவித்தார். உணவு தயாரிக்கும் பெட்டி, பி.6 மற்றும் பி.7 ஆகிய மூன்று பெட்டிகளே இந்த தீவிபத்தில் சிக்கின.  தீப்பிடித்த மூன்று பெட்டிகளும் தனியாக கழற்றப்பட்டு அந்த ரயிலை மீண்டும் டெல்லிக்கு அனுப்பும் பணிகளை ரயில்வே துறை பொறியாளர்கள் மேற்கொண்டனர்.
அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் காரணமாக அந்த வழித்தடத்தில் பல மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 6 மணிநேர தாமதத்திற்கு பிறகு அந்த ரயில் மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த தீவிபத்து குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: