முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கச்சிமடம் அருகே கரைஒதுங்கிய திமிங்கல தோல்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமேசுவரம்,பிப்.16 - ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் நேற்று ஒரேநாளில் கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் மற்றும் திமிங்கலத்தின் தோல் கரை ஒதுங்கியது. ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் அருகே உள்ளது நாலுபனை கிராமம் பகுதி. இந்த ஊர் வடக்குகடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இறந்தநிலையில் டால்பின் ஒன்று கரைஒதுங்கியது. ஆண் இனத்தைச்சேர்ந்த இந்த டால்பின் சுமார் 300கிலோ எடையும் 3மீட்டர் நீளமும், 2மீட்டர் அகலமும் கொண்டிருந்தது. இந்த டால்பின் 4நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடலில் ஆழமான பகுதிகளில் வசிக்க கூடிய இந்த டால்பின் படகில் மோதி காயம்பட்டு இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும், பாறைகளின் இடையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் உறுதியான காரணம் என்ன என்று தெரியவில்லை. டால்பின் இறந்து கரை ஒதுங்கிய தகவல்பரவியதும் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டு கூட்டம்கூட்டமாக பார்த்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த வனசரகர் வெங்கடாசலபூபதி, வனவர் ஜபார் உள்ளிட்ட ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று டால்பினை பார்த்து ஆய்வு செய்தனர். கால்நடைத்துறை டாக்டர் தேவகி தலைமையிலான மருத்துவகுழுவினர் வரவழைக்கப்பட்டு டால்பின் அந்த இடத்திலேயே உடற்கூறுபரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரசாயன பொருட்கள் ஊற்றி குழிதோண்டி டால்பின் உடல் புதைக்கப்பட்டது. இறந்து முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்ட இந்த டால்பினை சிலர் டுஹாங் டுஹாங் என்றும் ஆவுலியா என்றும் அழைக்கப்படும் குட்டிபோட்டு பால்கொடுக்கும் இனத்தைசேர்ந்த கடல்பசு என்று தெரிவித்தனர். 

இதேபோல, அந்த பகுதியில் நேற்றுகாலை கடற்கரையோரத்தில் திமிங்கலத்தின் தோல்மட்டும் கரைஒதுங்கியது. நடுக்கடலில் இறந்த திமிங்கலத்தின் உடல்பகுதி அரிக்கப்பட்டு வெறும் தோல்பகுதிமட்டும் கடல்நீரில் அடித்துவரப்பட்டு கரைஒதுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இறந்து  நீண்டநாட்களாகி இருக்கும் என்று கருதப்படும் இந்த திமிங்கலத்தின் தோல் 4டன் எடை உள்ளதாக உள்ளது. 12அடி நீளமும், 8அடி அகலமும் உள்ள இந்த திமிங்கலத்தின் தோலினை கரைக்கு இழுக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் உதவியுடன் வனத்துறையினர் திமிங்கல தோலினை கரைக்கு இழுத்து வந்து துண்டுதுண்டாக கால்நடைத்துறை டாக்டர் மூலம் பரிசோதனை செய்து வெட்டி அந்த இடத்திலேயே புதைத்தனர். மேலும், இந்த திமிங்கலத்தின் உடலில் உள்ள கொழுப்பு மிகப்பெரிய கட்டி அளவில் கடலில் மிதந்து வந்ததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கொழுப்பு கட்டியையும் உடனடியாக அப்புறப்படுத்தி சுகாதாரகேட்டினை தடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரேநாளில் திமங்கலம், டால்பின் ஆகியவை இறந்தநிலையில் கரைஒதுங்கிய சம்பவம் கடலோரபகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இயற்கையான முறையில் பாதிப்பு ஏற்பட்டு இந்த கடல்வாழ் உயிரினங்கள் இறந்துள்ளனவா? அல்லது யாரும் வேட்டையாடி முக்கிய பாகங்களை எடுத்துக்கொண்டு கடலில் வீசிவிட்டு சென்றுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து கடலோர காவல்படை, கடற்படையினர் தீவிர ரோந்து சுற்றி கடல்வாழ் உயிரினங்களை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்