முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல்: கோவா கவர்னரிடம் சி.பி.ஐ. விசாரிக்க முடிவு

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, மார்ச். - 10 - வி.ஐ.பி. க்கள் பயணத்திற்காக இத்தாலியைசேர்ந்த அகஸ்டாவெஸ்டா லேண்டு நிறுவனத்திடம் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ரூ. 3,546 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற இத்தாலி நிறுவனம் இந்தியர்களுக்கு ரூ. 400 கோடி லஞ்சம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இத்தாலிய அரசு இது தொடர்பாக சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம் மொரீசியஸ், துணிசா நாடுகள் வழியாக லஞ்சப் பணம் கைமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ரூ. 400 கோடி லஞ்சம் பெற்ற இந்தியர்கள் யார், யார் என்பதை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. சிறப்பு குழு சமீபத்தில் இத்தாலி சென்று தகவல்களை சேகரித்து வந்துள்ளது. ஒப்பந்தம் செய்த போது விமானப் படை தளபதியாக எஸ்.பி.தியாகி இருந்தார். அவர் தன் உறவினர்கள் மூலம் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அப்போது தியாகி சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன், சிறப்பு பாதுகாப்பு படை ஆலோசகராக இருந்த விர்வாண்சுவும் திருத்தினார்கள் என்றும் எனவே திருத்தப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தியதற்கு அவர்கள் இருவருமே பொறுப்பு என்றும் கூறினார். எம்.கே. நாராயணனும், விர்வாண்சுவும் ஹெலிகாப்டர் பேரத்தில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற விபரங்களை எஸ்.பி.தியாகி ஆதாரங்களுடன் கொடுத்திருப்பதாக தெரிகிறது. எனவே இந்த புதிய அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த தகவல்களை சி.பி.ஐ. விசாரிக்க தீர்மானித்துள்ளது. ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விசாரணையை முழுமையாக திறம்பட நடத்த முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஏனெனில் சந்தேக வழக்கில் வந்துள்ள இருவருமே தற்போது கவர்னர்களாக உள்ளனர். எம்.கே. நாராயணன், விர்வாண்சு முறையே மேற்கு வங்கம், கோவா மாநில கவர்னர்களாக உள்ளனர். எனவே இவர்களிடம் விசாரணை நடத்த உரிய அனுமதி பெறப்பட வேண்டும். இதனிடையே இந்த ஊழலில் எஸ்.பி.தியாகிக்கும் அவரது உறவினர்கள் சஞ்சீவ், டோஸ்காவிற்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் டெல்லி வக்கீல் கவுதம் கெய்தான், தொழிலதிபர் பிரவீண்பக்சி ஆகியோருக்கும் ஹெலிகாப்டர் ஊழலில் முக்கிய பங்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ. ஏற்பாடு செய்து வருகிறது. இத்தாலியில் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையிலும் நடவடிக்கையை சி.பி.ஐ. துவங்கவுள்ளது. ஆனால் இதுவரை சி.பி.ஐ. விசாரணைக்கு இத்தாலி அதிகாரிகள் உரிய வகையில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதையடுத்து இத்தாலியிடம் இருந்து தகவல்கள் பெற்றுத்தர இங்கிலாந்து முன்வந்துள்ளது. இங்கிலாந்து உதவியால் இத்தாலி தகவல்கள் வந்தால் லஞ்சம் வாங்கிய இந்தியர்கள் யார், யார் என்பது உறுதிபட தெரிந்து விடும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்