முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வில் இந்தியா தாக்கல் செய்த அறிக்கை: வைகோ தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.18 - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்துள்ள அறிக்கையானது சிங்கள அரசுக்கு பல்லக்கு தூக்கும் ஈனச் செயல் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிங்கள கொலை பாதக அரசு ஈழத் தமிழ் இனத்தை கூண்டோடு கருவறுக்க திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த மனித உரிமை கவுன்சில் தீர்மானிக்க வேண்டுமென்ற கோரிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் இமயமாய் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் லட்சோப லட்ச மாணவர்கள் அறவழி போர்க் கொடி உயர்த்தி, மவுனப் புரட்சி நடத்தும் இன்றைய சூழலில் இந்திய அரசு மார்ச் 15-ந் தேதி மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசை பட்டவர்த்தனமாக ஆதரித்து, அக்கிரமமான அறிக்கை தந்துள்ள துரோகம், தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலை திணித்துள்ளது. 

இந்த அறிக்கை சிங்கள ராஜபக்சே அரசு தயாரித்து தந்த அறிக்கையாகவே தோன்றுகிறது. தமிழ் இனப் படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதானே இந்திய அரசு. தமிழர்களின் மீள் குடியேற்றமும் மறுவாழ்வும் வரவேற்கத்தக்க விதத்தில் சிங்கள அரசு நடத்தியுள்ளதாகவும், ராஜபக்சே அரசு அமைத்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும், மனித உரிமை மீறல் குறித்த புகார்களை சிங்கள அரசே முறையாக விசாரிக்கும் என்று நம்புவதாகவும், வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடத்தி இலங்கை சுமூகமான வெற்றி காண வேண்டுமென்று வாழ்த்துவதாகவும் ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு அறிக்கை தந்து கொலைபாதக சிங்கள அரசுக்கு பல்லாக்கு தூக்குகிற ஈனச் செயலை செய்துள்ளது. 

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உடந்தையாக செயல்பட்டது என்பதற்கு 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு செய்த துரோகங்களை ஆணித்தரமான ஆதாரங்களை காரணமாக சொல்லி வந்துள்ளேன். 

தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா? தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக இந்திய அரசு ஏற்கவில்லையா? என்ற கேள்வி தமிழர் மனங்களில் பூதாகரமாக எழுந்துள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குழி பறிக்கும் வேலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்கிறது. வினையை விதைத்துக் கொண்டே இருக்கிறது. இதற்கான விலையை காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையிலான மத்திய அரசும் கொடுக்க நேரிடும். மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது. விபரீதங்களை அறுவடை செய்யப்போகிறது என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்