முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் பெருகிவரும் ஊழலுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்

சனிக்கிழமை, 23 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,மார்ச் - 24 - இந்தியாவில் பெருகி வரும் ஊழலுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று சமாஜ்வாடி கட்சிதலைவர் முலாயம் சிங்யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.அது மட்டுமின்றி தனதுசொந்தமகன் அகிலேஷ் யாதவுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒழுங்காக ஆட்சி நடத்தாவிட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்று தன் மகனுக்கே அவர் அறிவுரை கலந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.   ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அங்கம் வகித்த கட்சி திமுக. இந்த கட்சி சமீபத்தில் இலங்கை இனப்படுகொலை பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. கூட்டணியிலிருந்தும் விலகுவதாக இக்கட்சிதலைவர் கருணாநிதி அறிவித்து விட்டார். திமுக விலகிவிட்ட நிலையில் இனி மத்திய அரசு சமாஜ்வாடி கட்சியையும், மாயாவதி கட்சியையும் நம்பித்தான் ஆட்சி நடத்தி ஆகவேண்டும். இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் காலை வாரிவிட்டாலும் மன்மோகன் சிங் அரசு வீட்டிற்கு போவதை தவிர வேறு வழியில்லை.இவர்களை பகைத்துக்கொண்டால் பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர வாய்ப்புண்டு.    நிலைமை இப்படி இருக்க, திமுக விலகிவிட்ட சில நாட்களிலேயே முலாயம் சிங் யாதவ் காங்கிரசை தாக்கி பேச ஆரம்பித்துவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் காங்கிரசை கடுமையாகவே சாடி உள்ளார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, இந்தியாவில் பெருகி வரும் ஊழலுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்.உத்தரபிரதேச மாநிலத்திலும் அமைச்சர்கள் மாநிலத்திற்காக பணியாற்றுவதே இல்லை. தங்கள்  சொந்த வேலைகளிலேயே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். அமைச்சர்கள் என்றால்  பணியாற்ற வேண்டும். நான் அவர்களுக்கு 5 மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். உத்தரபிரதேசத்தில் ஊழல் பெருகி வருவதாக அத்வானியே என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினார். அவர் பொய் சொல்லமாட்டார். சொல்லக்கூடியவரும் அல்ல. அவரை நான் நம்புகிறேன். எனவே மகன் அகிலேசுக்கு நான் ஒன்றைசொல்ல விரும்புகிறேன். உன்னுடைய இமேஜை நீ பாழ் படுத்திக்கொண்டால் மீண்டும் பதவிக்கு வரமுடியாது. அதை நினைவில் வைத்துக்கொண்டு செயலாற்று. உத்தரபிரதேச ஆட்சி பற்றி அத்வானி என்னிடம் நேரில் புகார் தெரிவித்துள்ளார். அவர் வார்த்தையை நம்பி உனக்கு எச்சரிக்கிறேன். நல்லாட்சி நடத்து. மந்திரிகளை வேலை வாங்கு. காங்கிரசும் இந்தியாவில் பெருகி வரும் ஊழலுக்கு ஒரு மிகப்பெரிய காரணம். இவ்வாறு முலாயம் சிங் பேசினார்.

       சிலதினங்களுக்கு முன் முலாயம் சிங் யாதவை மத்திய அமைச்சர் வேணிபிரசாத் வர்மா கடுமையாக தாக்கி பேசினார். முலாயம்சிங்கிற்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். இது பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. உடனே முலாயம் சிங் யாதவ் வர்மாவை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார்.அப்போது சபையில் இருந்த சோனியா, முலாயம் சிங் இருப்பிடத்திற்கே சென்று அவரை கையெடுத்து கும்பிட்டு இந்த பிரச்சினையை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டார். அத்தோடு அந்த பிரச்சினை முடிந்தாலும், தற்போது மீண்டும் காங்கிரசை தாக்க தொடங்கி விட்டார் முலாயம் சிங். போகிற போக்கை பார்த்தால் இவரும் விலகினாலும் ஆச்சரியமில்லை. அப்படி விலகினால் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரப்போவது உறுதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்