முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஆக்ரோஷ வெற்றி போராடி பணிந்தது பஞ்சாப்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 25  - டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் போராடி தோற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 26-வது ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. அதிக தோல்விகளால் துவண்டுபோன டெல்லி அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக இருந்தது. அணி மீண்டெழ இந்த போட்டியில் வெல்வது மிக முக்கியம் என கருதப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு சேவாக் தலைமையிலான டெல்லி அணியினர் பெரோஷா கோட்லா மைதானத்தில் களமிறங்கினர். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அதிரடி விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் தலைமையிலான  வலுவான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது. டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் டெல்லி அணி பேட்செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்கள் வார்னர் மற்றும் சேவாக் தங்கள் அதிரடி ஆட்டத்தை துவக்கினர். இந்த ஜோடி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக சேவாக் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் முதல் 5 ஓவர்களிலேயே டெல்லி 50 ரன்களை எட்டியது. இதையடுத்து வார்னர் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். டெல்லி அணியின் முதல் 100 ரன்கள் 8.4 ஓவர்களிலேயே கிடைத்தது. சேவாக் 28 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் பவுலர்கள் திணறினர். இந்நிலையில் டெல்லி அணியின் ஸ்கோர் 11.4 ஓவர்களில் 146 ஆக இருந்தபோது ஹுஸ்ஸேவின் பந்தில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கால் கேட்ச் செய்யப்பட்ட சேவாக் ஆட்டமிழந்தார். இவர் 35 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த நாகர் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் நாயரின் பந்தில் போல்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 14 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ஆக இருந்தது. இவரை அடுத்து வேணுகோபால் ராவ் களமிறங்கினார். இந்த நிலையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த வார்னர், குமாரின் பந்தில் ஹாரிஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவர் எடுத்த ரன்கள் 77. அடுத்து வந்த பின்ச் சாவ்லாவின் பந்தில் 3 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து ஓஜா, வேணுகோபாலுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சிறப்பாக கொண்டுசென்றனர். இதனால் 18.3 ஓவர்களில் டெல்லி அணி 200 ரன்களை தொட்டது. கடைசி 1.3 ஓவர்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து 31 ரன்களை சேர்க்க டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. வேணுகோபால் ராவ் ஆட்டமிழக்காமல் 28 ரன்களையும், ஓஜா 19 ரன்களையும் அடித்தனர். பஞ்சாப் அணி சார்பாக குமார், ஹுஸ்ஸே, சாவ்லா, நாயர் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினர். 

232 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் அதிரடி வீரர் பால் வல்தாட்டி ஆகியோரும் துவக்கம் முதலே அதிரடியை மேற்கொண்டனர். ஆனால் இந்த ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்துள்ள வல்தாட்டி இம்முறை ரன் குவிக்க தவறினார். இவர் 14 ரன்களை எடுத்திருந்தபோது இர்பான் பதானின் பந்தில் நாகரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து மார்ஷ், கில்கிறிஸ்டுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக கில்கிறிஸ்ட், அகார்கரின் ஒரு ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை அடித்தார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 97 ஆக இருந்தபோது கில்கிறிஸ்ட், ஆரோன் பந்தில் போல்டானார். இவர் எடுத்த ரன்கள் 42. இவரை அடுத்து தினேஷ் கார்த்திக் 6 ரன்களே எடுத்த நிலையில் அகார்கரின் பந்தில் சேவாக்கிடம் பிடிகொடுத்து அவுட்டானார். பின்னர் ஹுஸ்ஸே, மார்ஷுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் அதிரடியாக ரன் சேர்த்தனர். குறிப்பாக மார்ஷ் தனது அதிரடியால் பஞ்சாப் அணிக்கு வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தினார். அணியின் ஸ்கோர் 15.2 ஓவரில் 153 ஆக இருந்தபோது ஹுஸ்ஸே 20 ரன்களில் ஹோப்ஸின் பந்தில் சேவாக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை தொடர்ந்து அபிஷேக் நாயர் களமிறங்கி சில அதிரடி ஷாட்களை ஆடினார். அணியின் ஸ்கோர் 184 க்கு வந்தபோது அதிரடியாக ரன் குவித்த மார்ஷ் அதிர்ச்சியளிக்கும் வகையில் மோர்கலின் பந்தை தவறாக கணித்து அடிக்க அது சேவாக்கின் கையில் கேட்ச் ஆனது. மிகப் பிரமாதமாக விளையாடிய மார்ஷ் 46 பந்துகளில் 95 ரன்களை குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். இவர் ஆட்டம் இழந்ததும் பஞ்சாப் அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை மட்டுமே  எடுத்தது. நாயர் ஆட்டமிழக்காமல் 17 ரன்களையும், ஹாரிஸ் 1 ரன்னையும் எடுத்திருந்தனர்.  டெல்லி தரப்பில் அகர்கர் 2 விக்கெட்டுகளையும், மோர்கெல், ஆரோன், பதான், ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். டெல்லி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை  வென்று 5 போட்டிகளின் முடிவில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஐ.பி.எல். 4 வது  தொடரில் டெல்லி அணி எடுத்த 231 ரன்களே இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்