முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு நிறுவன அதிபர் கடத்தி சிறைவைப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
no image 17

 

சென்னை, ஏப்.27 - வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து தராமல் ஏமாற்றிய வேலைவாய்ப்பு நிறுவன அதிபரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை சூளைமேடு திருவள்ளுவர் புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன் (57). தொழில் அதிபர். சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோட்டில் யாகா மேன்பவர் என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக வெளி நாடுகளுக்கு இவர் ஆட்களை அனுப்பி வருகிறார்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பழனிவேல், நீலகண்டனிடம் லட்சக்கணக்கான ரூபாயை கொடுத்து வெளிநாட்டில் வேலை வாங்கி தரும்படி கேட்டார். அவரை தென் ஆப்பிரிக்காவுக்கு நீலகண்டன் அனுப்பி வைத்தார். அங்கு செந்ற பழனிவேல் வேலை பிடிக்காமல் சிறிது நாட்களிலேயே ஊர் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. நீலகண்டனை சந்தித்து நீங்கள் வாங்கி கொடுத்த வேலை எனக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அங்கிருந்து வந்து விட்டேன். எனவே நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று கேட்டார். ஆனால் நீலகண்டன் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பழனிவேல் தனது மைத்துனர் ரவி மற்றும் 2 பேரை அழைத்துக்கொண்டு சூளைமேட்டில் உள்ள நீலகண்டன் அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றார். அங்கு வைத்து நீலகண்டனிடம் பணத்தை கேட்டு பழனிவேல் தகராறில் ஈடுபட்டார். பின்னர் 4 பேரும் சேர்ந்து நீலகண்டனை காரில் கடத்தி சென்றனர். கோடம்பாக்கத்தில் ஒரு அறையில் அவரை சிறை வைத்தனர். இது குறித்து நீலகண்டனிடம் பணி புரியும் ஊழியர் செல்வராஜ் சூளைமேடு போலீசில் புகார் செய்தார்.

நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ஜபகர்சாலி, இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோடம்பாக்கத்தில் நீலகண்டன் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்று அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அறையை சுற்றி வளைத்து அதிரடியாக அவரை மீட்டனர்.

பழனிவேல், ரவி ஆகிய 2 பேரும் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: