வங்கதேச விபத்து: பெண்ணுக்கு ரூ.25,000 சம்பளத்தில் வேலை

சனிக்கிழமை, 8 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

டாக்கா, ஜூன். 9  - உலகையே உலுக்கிய வங்கதேச கட்டிட விபத்தில் 17 நாட்களுக்குப் பிறகு உயிர் பிழைத்த அதிசயப் பெண்ணுக்கு நட்சத்திர ஓட்டலில் வேலை கிடைத்துள்ளதாம். கடந்த மாதம் வங்காளதேசத்தில் 8 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் சுமார் 1129 பேர் பலியானார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக நூற்றுக்கணக்கானோர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயமும் நிகழ்ந்தது. அதிலும் குறிப்பாக, 19 வயது ரேஷ்மா பேகம் என்ற தையல் தொழிலாளி ஒருவர் விபத்து நடந்து கிட்டத்தட்ட 17 நாட்களுக்குப் பிறகு மீட்புக் குழுவினரின் தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக உயிரோடு மீட்கப்பட்டார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள ரேஷ்மா, விபத்து குறித்து கூறும்போது, உயிர் பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. அந்த நிலையில் என்னை காப்பாற்றியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. முன்பு நான் எங்கிருந்தேன், இப்பொழுது நான் எங்கு இருக்கிறேன், என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என தான் உயிர் பிழைத்த அனுபவங்களை மெய் சிலிர்க்கக் கூறினார். கிட்டத்தட்ட மரணத்தை ருசித்து விட்டு திரும்பியுள்ள ரேஷ்மா தான் தற்போது வங்காளதேசத்தின் ஹீரோயின். இந்த ஹீரோயினுக்கு ஒரு ஸ்டார் ஓட்டல் நிர்வாகம், ரூ. 25,000 மாதச் சம்பளத்தில் வரவேற்பாளர் வேலை கொடுக்க முன் வந்துள்ளது தான் லேட்டஸ்ட் நியூஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்: