முக்கிய செய்திகள்

ஏ.ஐ.சி.டி.இ. கேள்வித்தாள் அவுட்டானதால் நுழைவுத்தேர்வு பல மணி நேரம் தாமதம்

திங்கட்கிழமை, 2 மே 2011      தமிழகம்
school

சென்னை, மே.- 2 - இந்தியா முழுவதும் நேற்று நடைபெற இருந்த ஏ.ஐ.சி.டி.இ. நுழைவுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அவுட்டானதால், இந்த தேர்வு குறிப்பிட்ட நேரத்துக்கு துவங்காமல், பல மணி நேரம் கழித்து துவங்கியது. இதனால், மாணவ, மாணவியர் பெரிதும் அவதிப்பட்டனர். அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கான(ஏ.ஐ.சி.டி.இ.)  நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் 80 நகரங்களில் 1,600 மையங்களில் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 27,752 இடங்களுக்கு 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ​ மாணவிகள் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களில் 1 லட்சம் பேர் 20 நகரங்களில் ஆன்லைனில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. சென்னையில் அரும்பாக்கம் வைஷ்ணவ சீனியர் செகண்டரி பள்ளி மையம் உள்பட பல மையங்களில் காலை 9.30 மணிக்கு நுழைவுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மாணவ​ மாணவிகள் வந்து இருந்தனர். காலை 9.30 மணிக்கு பி.இ., பி.டெக் முதல் தாளும், மதியம் 2 மணிக்கு பி.ஆர்க், பி.பிளான் 2​ம் தாள் தேர்வும் நடப்பதாக இருந்தது. தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு லக்னோவில் நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாள் அவுட் ஆனது. இதையடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பிட்டபடி காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங் கப்படவில்லை. இதனால் தேர்வு எழுத வந்த மாணவ​ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு எப்போது தொடங்கும் என்பது பற்றி மாணவ​ மாணவிகளிடையே குழப்பம் ஏற்பட்டது.இதற்கிடையே காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்த முதல் தாள் தேர்வு பகல் 12 மணிக்கு தொடங்கும் என்றும், மதியம் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்த 2​ம் தாள் தேர்வு இரவு 7 மணிக்கு தொடங்கும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு அந்தந்த தேர்வுமையங்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. வழக்கமாக நுழைவுத் தேர்வுக்கான கேள்வித் தாள் இரண்டுவிதமாக தயாரிக்கப்படும். இதில் ஒன்று அவுட் ஆனாலும், மற்றொரு கேள்வித்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். அதன்படி மற்றொரு கேள்வித்தாள் மூலம் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் உள்ள மையங்களில் தேர்வு எழுதுவதற்காக வந்த மாணவ​ மாணவிகள் மதியம் 12 மணி வரை காத்து இருந்தனர். அதன் பிறகு தேர்வு எழுதச் சென்றனர். சில மாணவ​ மாணவிகள் தேர்வை புறக்கணித்து விட்டு மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் ராணுவ மருத்துவ கல்லூ ரிக்கான நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள சென்றுவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: