சீக்கியர் கலவர வழக்கு: சஜ்ஜன் குமாருக்கு நோட்டீசு

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.11 - சீக்கியர்களுக்கெதிரான கலவர வழக்கில் விடுதலை செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் மற்றும் சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி,பாதுகாவலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அந்த பாதுகாவலர் சீக்கியராவார். இதனால் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. இதில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் சேர்க்கப்பட்டார். சீக்கிய கலவர வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து கலவரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களான ஜெகதீஷ் கவுர், நிர்ப்ரீத் கவுர் ஆகியோர்கள்  வழக்கறிஞர் கம்னா ஹோரா மூலம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சீக்கிய கலவரத்தில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதில் சஜ்ஜன் குமாருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் போதுமான அளவு இருக்கிறது. அது கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி கோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, ஜி.பி.மிட்டல் ஆகியோர் கொண்ட பெஞ்ச், சஜ்ஜன் குமார் மற்றும் சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். அந்த நோட்டீசில் வரும் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: