முக்கிய செய்திகள்

கறுப்பு பணத்தை முதலீடு செய்த இந்தியர்கள் விவரம் சேகரிப்பு

India-Black-Money 0

 

புது டெல்லி,மே.10 - கறுப்பு பணத்தை முதலீடு செய்ய வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் குறித்த விவரங்களை பெற வருமான வரித்துறை திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. சுவிட்சர்லாந்து, பஹாமாஸ், விர்ஜின் தீவுகள் போன்ற நாடுகளுக்கு வர்த்தக ரீதியாகவும், சொந்த வேலையாகவும் செல்பவர்களை இனிமேல் கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள். அவர்கள் அந்த நாடுகளில் எந்தெந்த இடங்களுக்கு செல்கிறார்கள், எதற்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை பெற்றிடுங்கள் என்று தமது புலனாய்வு துறைக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. 

மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த ஆண்டு சென்று வந்தவர்களின் விவரங்களை பெற்று அவர்கள் வரிமான வரி கணக்கு தாக்கல் செய்த போது அதில் இந்த நாடுகளுக்கு சென்ற போது ஆன செலவு குறித்து குறிப்பிட்டுள்ளார்களா என்பதை ஆய்வு செய்யுமாறு அதன் புலனாய்வு பிரிவை கேட்டுக் கொண்டுள்ளது. வருமான வரித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு விமான போக்குவரத்து துறையின் உதவியை நாடியதாக தெரிகிறது. அத்துறையும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரியவந்துள்ளது. 

இந்தியாவை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளின் வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாயை கறுப்பு பணமாக பதுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் வேளையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. மேலும் கறுப்பு பண விவகாரம் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறும் சுப்ரீம் கோர்ட் அவ்வப்போது கேட்டு வருகிறது. இதனால் கறுப்பு பண விவகாரத்தில் வருமான வரித்துறை இப்போது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: