முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ராஜபக்சேவுடன் நவநீதம் பிள்ளை ஆலோசனை!

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

கொழும்பு, செப். 1 - இலங்கை சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

மகிந்த ராஜபக்சேவின் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கையில் வாழும் மக்களிடையே சமத்துவம், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்று வலியுறுத்தினார் நவநீதம்பிள்ளை. மேலும் சிறுபான்மையினத்தவர்களின் மத வழிபாட்டுத் தலங்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உரியநடவடிக்கை தேவை என்றும் ராஜபக்சேவிடம் அவர் வலியுறுத்தினார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவையும் நவநீதம் பிள்ளை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து கொழும்பில் சினமன் லேக்சைட் ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நவநீதம்பிள்ளை சந்தித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். தமது இலங்கை பயணம் தொடர்பாக அடுத்தமாதம் ஐ.நா.மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வில் அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார் நவநீதம் பிள்ளை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்