முக்கிய செய்திகள்

நித்தாரி படுகொலை விவகாரம் - கோலி கருணை மனு

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      இந்தியா
Surender png

 

புது டெல்லி,மே.11 - நாட்டையே உலுக்கிய நித்தாரி படுகொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுரேந்தர் கோலி தண்டனையை ரத்து செய்யும்படி ஜனாதிபதியிடம் கருணை மனு செய்துள்ளார். டெல்லி அருகே நித்தார் கிராமத்தில் கடந்த 2006 ல் 16 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் சுரேந்தர் கோலி, மொஹிந்தர்சிங் ஆகியோருக்கு காசியாபாத் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2009 ல் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுரேந்தர் கோலியும், மொஹிந்தர்சிங்கும் அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சுரேந்தர் கோலியின் தண்டனையை உறுதி செய்தது. 

மொஹிந்தர்சிங் விடுதலை செய்யப்பட்டார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சுரேந்தர் கோலிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது. அவரை இம்மாதம் 31 ம் தேதி 4 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி சுரேந்தர் கோலி தனக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்துள்ளார் என்று சி.பி.ஐ. வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார். 

இந்த கொலை வழக்குடன் மேலும் மூன்று வழக்குகளிலும் கோலிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மொஹிந்தர்சிங் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரும் இப்போது சிறையில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: