முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறைகேடு: ரயில்வேக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.9 - இரும்பு ஏற்றுமதியில் இரட்டை விலை முறையை ரயில்வே துறை கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி உள்நாட்டில் இரும்பு எடுத்துச் செல்வதை விட, ஏற்றுமதியாகும் இரும்புக்கு விலை குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் லாபமடைந்தன. ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி வரை ரயில்வேயின் ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் இழப்பு ரூ. 50 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலங்களில் 2008 மே மாதம் முதல் 2012 மார்ச் வரை நடந்த இரும்பு ஏற்றுமதி தொடர்பான கணக்கு தணிக்கையின்போது, இந்த முறைகேடு நடந்து இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதில் 126 நிறுவனங்கள் இரும்பு ஏற்றுமதிக்கான  முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. 

இந்த நிறுவனங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமலேயே உள்நாட்டு விலைக்கே அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் 258.38 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், 290 நிறுவனங்கள் முழுமை பெறாத ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன. அவற்றுக்கு உள்நாட்டு விலைக்கு இரும்பு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2090.15  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ரயில்வேயில் மட்டும் இந்த முறைகேடு நடந்துள்ளது. 

முழுமையான ஆவணங்கள் தாக்கல் செய்யாமலும், அரைகுறையாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட வகையில் நடந்த முறைகேட்டில் 2343.53 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கணக்கு தணிக்கை துறையின்  இந்த குற்றச்சாட்டால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த ஆண்டு நிலக்கரி சுரங்க மறைகேடு பிரச்சனை எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பிரச்சனையை கிளப்பியதால் பாராளுமன்றம் ஸ்தம்பித்தது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு நடந்தபோது, அந்த இலாகாவை பிரதமர் மன்மோகன்சிங் கவனித்து வந்தார். எனவே அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இப்போது ரயில்வே துறையிலும் பூதாகரமான முறைகேடு தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள  நிலையில அடுத்தடுத்த ஊழல் புகார்களால்  காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்