முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் அருகே மலையில் குடியேறிய கிராம மக்கள்

சனிக்கிழமை, 21 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.21 - மேலூர் அருகே மலையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு மலையில் குடியேறினர். அதிகாரிகள் பொருட்களை அள்ளிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி பகுதியில் புராதன மலை உள்ளது. இந்த மலையின் ஒரு பகுதியை குவாரிக்காக அரசு தனியாருக்கு ஏலம் விட்டுள்ளது.  இந்த மலையை ஏலம் எடுத்தவர்  உடைக்க துவங்கினார். இதை தடுத்து நிறுத்தக்கோரி கடந்த 16 ம் தேதி அரிட்டாப்பட்டி கிராம மக்கள் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். ஆனால் மலை உடைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து நேற்று காலை அரிட்டாபட்டி, லட்சுமிபுரம், மீனாட்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரேஷன்கார்டுகளுடனும், பொருட்களுடனும் மலையில் குடியேறினர். மலையை வெட்டி எடுக்கும்  பணியை நிறுத்தும் வரை ஊருக்குள் செல்வதில்லை என  அங்கேயே அமர்ந்திருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பேச்சுவார்த்தைக்கு வரும் அதிகாரிகளிடம் ரேஷன்கார்டுகளை ஒப்படைக்கப்போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

   இந்த நிலையில் மலையில் வெயிலில் அமர்ந்திருந்த மூன்று பேர் மயக்கமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசாரும், ஆர்டிஓ சரசுவதி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அதிகாரிகள் மலையில்  முற்றுகையிட்ட  கிராம மக்களின் பொருட்களை எடுத்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதை தொடர்ந்து மலையில் இருந்த கிராம மக்கள் ஊருக்குள் திரும்பினர். இது தொடர்பாக மேலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் ஆர்டிஓ பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் மாலை பேசியும் முடிவு ஏற்படவில்லை.  இதை தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்துவது எனவும், அதுவரை அமைதியாக இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   

     சம்பவம் குறித்துஏ மலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரிட்டாபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் கூறியதாவது, எங்கள் ஊர் பகுதியில் உள்ள  சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கற்பாறைகளான மலை உள்ளது. இந்த மலை தற்போது தனியாருக்கு ஏலம் விடப்பட்டு அவர்கள் மலையை உடைத்து வருகிறார்கள். இந்த செயல்களால் அந்த பகுதியில் வசித்து வரும் கிராமத்தினரின் கலாச்சாரம், நம்பிக்கை, வாழ்வாதாரம், நினைவுச்சின்னம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மலை கற்காலம் முதல் உள்ளது. மன்னர் காலம் மற்றும்  புத்த, சமண சமய நினைவுச் சின்னங்களாகவும் விளங்கி வருகிறது. மேலும் கிராம மக்கள் இந்த மலையில் குடவறை கோவில் அமைத்து வழிபட்டும் வருகிறார்கள். இந்த மலையில் சிவன்கோவில், காளிகோவில், சிலை, மகாவீரரின் உருவம், புத்தரின் சிலை மேலும் சமணர்கள் இங்கு வாழ்ந்து வந்தததற்கான அடையாளங்களும் உள்ளன. மலையில் கல்வெட்டுகள், ஊற்று, பஞ்சபாண்டவர் படுக்கைகளும் உள்ளன.

    வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மலை 1966லேயே புராதன சின்னம் மற்றும் தொல்இயல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்றும் அறிவிக்கப்படடுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகஅரசு அறிவித்துள்ளது. அப்படிப்படட இந்த மலையை உடைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். அரிட்டாப்பட்டி மட்டுமின்றி சுற்றியுள்ள கல்லம்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, மாங்குளம், மீனாட்சிபுரம், வள்ளாலபட்டி, கூலானிபட்டி, சண்முகநாதபுரம் என பல ஊர்களை சேர்ந்த மக்கள் விவசாயத்தைமட்டுமே நம்பி உள்ளனர். இவர்கள் இந்த மலையையும், மழையையும் நம்பிதான் உள்ளனர்.கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கீழையூர், கீழவளவு, திருவாதவூர், வரிச்சியூர் உள்ள பகுதிகள் கிரானைட், மற்றும் கல்குவாரிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நிலை தற்போது எங்கள் ஊருக்கும் வந்துள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மலை உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதுவரை நாங்கள் மலையை விட்டு வரமாட்டோமா என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்