முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: கனிமொழி கைது

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.21 - ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டு

சதி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நிராகரித்தது. அவரை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டது. மேலும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதோடு அவரையும் உடனடியாக கைது செய்ய சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆ.ராசா அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் கனிமொழியும், சரத்குமாரும் அடைக்கப்பட்டனர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துமாறு சி.பி.ஐ.க்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை கண்காணித்து வந்ததோடு கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டின் முக்கிய குற்றவாளியான முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா,பிரபல அரசியல் தரகர் நீரா ராடியா, ராசாவின் தனிச்செயலாளராக இருந்த சந்தோலியா,டி.பி. ரியால்டி பிரமோட்டர் பால்வா, ராசாவின் பினாமி சாதிக்பாட்சா (இவர் தற்கொலை செய்துகொண்டார்) கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி எம்.பி., மற்றொரு பங்குதாரரான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், மத்திய தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா மற்றும் மேலும் பலரிடம் சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதனையடுத்து சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவின்படி ஆ.ராசா, பல்வா, சித்தார்த்த பெகுரா,பல்வா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில் 2 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஆதாயம் அடைந்த டி.பி.ரியால்டி நிறுவனத்தின் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியிருப்பது தெரியவந்தது. இதனையொட்டி கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதில் கனிமொழிக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி கூட்டு சதி செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனையொட்டி கடந்த 6-ம் தேதி ஆஜராகும்படி சி.பி. ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கனிமொழியும் சரத்குமாரும் கடந்த 6-ம் தேதி டெல்லி சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜரானார்கள். கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜரானார். அப்போது அவர் வாதாடுகையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார். சி.பி.ஐ. சார்பாக மூத்த வழக்கறிஞர் லலித் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் வாதாடுகையில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி கைமாறியதில் கனிமொழி முக்கி பங்கு வகித்துள்ளார். கலைஞர் டி.வியை கனிமொழிதான் முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும் முழு நிர்வாகத்தையும் அவர்தான் கவனித்து வந்தார் என்றும் கூறினார். அன்றைய தினமே கனிமொழியும் சரத்குமாரும் தங்களுக்கு ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்தனர்.  அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நாட்களில் சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழியும் சரத்குமாரும் ஆஜராகி வந்தனர். சென்னை வருமானவரி அலுவலகத்தில் கடந்த 12,13 ஆகிய தேதிகளில் கனிமொழி நேரில் ஆஜரான பின்னர் மே 13-ம் தேதி இரவு விமானம் மூலம் டெல்லி வந்தார். கனிமொழியின் ஜாமீன் மனுமீதான விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து கடந்த 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பை நீதிபதி ஷைனி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி கடந்த வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜரானார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்கு ஓய்வு வேண்டும் என்று நீதிபதி ஷைனியிடம் கனிமொழி முறையிட்டார். இதையடுத்து நீதிபதி ஷைனி அனுமதி வழங்கவே கனிமொழி நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஓய்வு எடுத்த பின் அன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் சரத்குமாரும் ஆஜராகியிருந்தனர். கனிமொழியுடன் அவரின் கணவர் அரவிந்தன் உடனிந்தார். 

இந்தநிலையில் கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர்களின் ஜாமீன் மனு நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர்களின் ஜாமீன் மனுவை நீதிபதி ஷைனி நிராகரித்துவிட்டார். மேலும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்யும்படியும் உத்தரவிட்டார். இரண்டு பேர்களின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த இரண்டு பேர்களையும் உடனிடயாக காவலில் வைக்கும்படி உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி ஷைனி கூறினார். வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வருவதால் கனிமொழியையும் சரத்குமாரையும் இன்று காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஷைனி கூறினார்.கனிமொழியும்  சரத்குமாரும் கைது செய்யப்பட்டு டெல்லியில் மிகுந்த பாதுகாப்பு உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

தன்வினை தன்னைச் சுடும்

 

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் கிரானைட் சுரங்க ஊழலை கண்டுபிடித்து தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக மு.க.அழகிரியின் தூண்டுதலுடன் தினபூமி ஆசிரியர் மீது பொய்வழக்கு தொடர்ந்து திருடர்களைப் போல நள்ளிரவில் வீட்டு காம்பவுண்டு சுவர் மீது ஏறிக்குதித்து, அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து தினபூமி ஆசிரியரை கைது செய்து சிறைக்கு அனுப்பியது கருணாநிதியின் போலீஸ். 

இப்படி தி.மு.க. ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தை பறித்து, பத்திரிகையாளர்கள் மீதே பொய்வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியதன் பலனை கருணாநிதி குடும்பம் தற்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சிக்கு லஞ்ச பணம் கைமாறிய விவகாரத்தில் கருணாநிதி மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும்வரை கனிமொழியின் தந்தை முதல் அமைச்சராக இருந்துள்ளார். அண்ணன் துணை முதல்வராக இருந்துள்ளார். மற்றொரு அண்ணன் தற்போதும் மத்திய அமைச்சராக உள்ளார். இவர்களால்கூட கனிமொழி சிறைக்கு செல்வதை தடுத்து நிறுத்த முடியவில்லை. விரைவில் கருணாநிதி உள்பட கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் கனிமொழிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் கருணாநிதி குடும்பம் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. தன்வினை தன்னைச் சுடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis