மலேசியாவில் இந்தியர் மரண தண்டனை தள்ளிவைப்பு

Image Unavailable

 

கோலாம்பூர்,பிப்.9 - மலேசியாவில் இந்திய வம்சாவளி இளைஞரின் மரண தண்டனை கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. அந்த நாட்டு மன்னரின் உத்தரவைத் தொடர்ந்து தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2003-ல் முத்துராமன் என்பவரை கொலை செய்ததாக சந்திரன் பாஸ்கரன் (36) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பாரூ உயர் நீதிமன்றம் 2008-ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது. சுமார் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவருக்கு வெள்ளிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் தண்டனையை தள்ளிவைக்க உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக சந்திரன் பாஸ்கரனின் சகோதரர் தாமோதரன் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் குடும்பத்தின் சார்பில் சுல்தானிடம் கருணை மனு அளித்துள்ளோம். அதன்பேரில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பெருமுயற்சி எடுத்த இந்து உரிமைகள் போராட்டக் குழுத் தலைவர் வேதமூர்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . இவ்வறு அவர் கூறினார்.

சந்திரன் பாஸ்கரனின் மரண தண்டனையை குறைக்கக் கோரி அம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு மன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்மாயிலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

மேலும் அமைப்பின் மலேசிய தலைவர் ஷாமினி தர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில், மரண தண்டனைகள் குறித்து மலேசிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ