இலங்கை தம்பதி கடத்தல் வழக்கு: லண்டன் போலீஸ் வருகை

Image Unavailable

 

சென்னை, பிப்.13 - சென்னையில் இலங்கை தம்பதி கடத்தப்பட்ட வழக்கில், லண்டனில் இருந்து போலீஸ் அதிகாரிகள் சென்னைக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார்கள்.

இலங்கையைச் சேர்ந்தவர் தவராஜா (வயது 59). இவர் லண்டனில் பெட்ரோல் பங்க் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். லண்டனில் மனைவி சலஜா மற்றும் மகள் தர்ஷினி ஆகியோருடன் வசிக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம், 29_ந்தேதி தவராஜாவும், அவரது மனைவி சலஜாவும் விமானத்தில் சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த அவர்கள் இருவரையும், மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்று விட்டனர். நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் என்ற ஊரில் சிறைவைக்கப்பட்டிருந்த, தவராஜாவும், அவரது மனைவியும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை ரூ.2 கோடி பணம் கேட்டு கடத்திய கும்பலைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சத்யா, மற்றும் கண்ணன், ஆசிரியை இந்திரா ஆகியோர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 13 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டனர்.

இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டு, சதித்திட்டம் வகுத்து கொடுத்ததாக, தவராஜாவிடம் வேலை பார்த்த ஊழியர்கள் அஜந்தன், ரமேஷ் ஆகிய இருவரையும் லண்டன் போலீசார் கைது செய்தனர். தவராஜா தம்பதி கடத்தப்பட்ட வழக்கு சென்னையிலும், கடத்தலுக்கு சதித்திட்டம் தீட்டிய வழக்கு லண்டனிலும் தனித்தனியாக தற்போது விசாரணையில் உள்ளது.

லண்டன் போலீசார் நடத்தும் வழக்கு தொடர்பாக மேல் விசாரணைக்காக, லண்டனில் இருந்து புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரிகள் கிரைக்மோகி, மார்க்யூக்ஸ் மற்றும் அவர்களது சட்ட ஆலோசகர் சஞ்சய்மைனி ஆகிய 3 பேர் நேற்றுமுன்தினம் சென்னை வந்தனர். அவர்கள் 3 பேரும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர்கள் சண்முகவேலு, வரதராஜு, துணை கமிஷனர் சேவியர்தன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்பு முடிந்தவுடன், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:_

லண்டன் போலீஸ் அதிகாரிகள் 3 நாட்கள் சென்னையில் தங்கி இருந்து, இந்த கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையை நடத்துவார்கள். எங்களிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர்களுக்கு கொடுப்போம். மேலும் கடத்தல் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ படங்கள் போன்றவற்றையும் கொடுக்க இருக்கிறோம்.

லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும், இ_மெயில் மூலம் அனுப்பிய தகவல் அடிப்படையில் தான், இலங்கை தம்பதிகள் கடத்தப்பட்டனர். லண்டனில் போடப்பட்டுள்ள வழக்கு சதித்திட்டம் தொடர்பான வழக்கு. சென்னையில் போடப்பட்ட வழக்கு கடத்தல் வழக்கு. இரண்டும் வெவ்வேறு வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ