முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 27 - ஹெல்மெட் அணிவது நாளை (28ம்தேதி) முதல் கட்டாயமாகிறது. தொடர்ச்சியாக ஹெல்மெட் அணியாமல் பிடிபடுபவர்களின் லைசென்சை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறினார். சென்னை மாநகர சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களே அதிக அளவில் உயிரிழக்கின்றனர். சென்னையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களில் மோட்டார்சைக்கிள் விபத்தில் 108 பேர் பலியாகியுள்ளனர். இதில் 102 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தலையில் அடிபட்டு உயிரை இழந்துள்ளனர். இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க, கடந்த ஆட்சியில் கட்டாய ஹெல்மெட் திட்டம் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்தனர். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் ஹெல்மெட் விற்பனையும் சூடு பிடித்திருந்தது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்து சென்றதை காண முடிந்தது. பல இடங்களில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய போதும் தலையில் அடிபடாமல் உயிர் பிழைத்தனர். இருப்பினும் ஹெல்மெட் வேட்டையில் போலீசாரின் வேகம் போகப்போக குறைந்தது. பெயரளவுக்கு மட்டுமே வழக்குகள் போடப்பட்டன. இருப்பினும் மோட்டார் சைக்கிளில் செல்லும் பலர் ஹெல்மெட்டை தலையில் அணியாவிட்டாலும், மோட்டார் சைக்கிளில் அவை தொங்க விட்டு செல்வதை காண முடிகிறது. போலீசாரின் கெடுபிடி குறைந்ததால் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. இதனால் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி, உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் அரோரா, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இது நாளை (28​ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க 300​க்கும் மேற்பட்ட தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியதாவது:​

வருகிற 28​ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வதாலே 95 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். ஹெல்மெட் அணியாமல் செல்வதால் குறைவான தொகையே (50 ரூபாய்) அபராதமாக வசூலிக்கப்படுகிறது. 50 ரூபாய்தானே கொடுத்து விட்டு சென்று விடலாம் என்று பொதுமக்கள் நினைக்கக்கூடாது. ஹெல்மெட் அணிவதால் விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்படுகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். தொடர்ச்சியாக ஹெல்மெட் அணியாமல் போலீசில் சிக்குபவர்களின் லைசென்சை ரத்து செய்யவும் அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்