கொல்கத்தா,ஜூன்.4 - நிலக்கரி மாபியா கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதிபட தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அசன்சால் நிலக்கரி சுரங்க பகுதியில் பட்டப்பகலில் 3 பேர் மாபியா கும்பலை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா, அசன்சால் பகுதியில் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நீண்ட காலமாக மாபியா கும்பல் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக முந்தைய இடதுசாரி அரசு அவர்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அசன்சால் பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் குற்றங்களுக்கு மாபியா கும்பல்தான் காரணம் என்று அவர் கூறினார். நிலக்கரி மாபியா கும்பலை ஒடுக்க தனி பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக சட்டப் பேரவை தேர்தலுக்கு முன் மாபியா கும்பல் குறித்த தகவல்களை சேகரிக்குமாறு திரிணாமுல் கட்சி உள்ளூர் தலைவர்களை மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.