முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணி அபார வெற்றி

புதன்கிழமை, 8 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

போர்ட்ஆப் ஸ்பெயின், ஜூன் - 8 - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு  அணிக்கு எதிராக ஒரு டுவெண்டி -20 போட்டி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கேப்டன் மகேந்திரசிங் தோனி, காம்பீர், யுவராஜ்சிங் போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வில் இருப்பதால் இந்திய அணி இளம் வீரர்களுடன் சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கியுள்ளது.  இதில் முதலில் நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அடுத்ததாக ஒருநாள் போட்டித் தொடர் துவங்கியது. போர்ட் ஆப் ஸ்பெயின்,  குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். துவக்க வீரர்களாக சிம்மன்ஸ் மற்றும் எட்வர்ட்ஸ் களமிறங்கினர். ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர். இந்திய பந்துவீச்சு மிகவும்  சிறப்பாக இருந்தது. இதனால் 7-வது ஓவரின் துவக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டை 23 ரன்களிலேயே இழந்தது. சிம்மன்ஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குமாரின் பந்துவீச்சில் ஹர்பஜன்சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து பிராவோ களமிறங்கினார். இவரும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 28 ஆக இருந்தபோது 4 ரன்களை மட்டும் எடுத்திருந்த பிராவோ, முனாப்பட்டேலின் பந்தில் சர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இந்நிலையில்  சர்வான் துவக்க வீரர் எட்வர்ட்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்தது. ஆனால் ஸ்கோர் 59 ஆக இருந்தபோது 21 ரன்களை எடுத்திருந்த எட்வர்ட்ஸ், ஹர்பஜனின் சுழலில் சிக்கினார். அந்த  கேட்சை அருமையாக பிடித்தவர் விராட் கோஹ்லி. அடுத்து களமிறங்கிய சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடினார். சாமுவேல்ஸ் மற்றும் சர்வான் ஜோடி அணியை மீட்கும் வகையில் விளையாடியது. இந்த ஜோடி  இந்திய பந்துவீச்சை சமாளித்து ரன்களை எடுத்தது. இந்நிலையில் 38-வது ஓவரின் கடைசி பந்தில் 56 ரன்களை எடுத்திருந்த சர்வான், முனாப் பட்டேலின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 141. அடுத்து சாமுவேல்சுடன் பிராவோ இணைந்தார். இந்த ஜோடியும் ஓரளவு ரன்களை உயர்த்தியது. அணியின் ஸ்கோர் 177 ஆக இருந்தபோது 55 ரன்களை எடுத்திருந்த சாமுவேல்ஸ், ரெய்னாவின் அற்புதமான பந்தில் கிளீன்போல்டானார். தொடர்ந்து அதிரடி பிராவோவும் 22 ரன்களை எடுத்த நிலையில் ஹர்பஜன்சிங் பந்தில் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து வந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை எடுத்தது. ராம்பால் ஆட்டமிழக்காமல் 9 ரன்களையும், மார்ட்டின் 2 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும், சுரேஷ் ரெய்னா, குமார், முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
215 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்கத்தில் ஆட்டம் கண்டது. துவக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் 13 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து துவக்க வீரர் ஷிகார் தவானுடன், இளம் வீரர் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். கோஹ்லி 2 ரன்களே எடுத்த நிலையில் ராம்பாலின் அற்புதமான ஒரு ஆர்ம் பாலில் விக்கெட் கீப்பர் பாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து பத்ரிநாத் களமிறங்கினார். இவர் தனது பங்கிற்கு 17 ரன்களை சேர்த்த நிலையில் பிஷூவின் பந்தில் விக்கெட் கீப்பரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து தவானுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அணியின் எண்ணிக்கையை சிறிது சிறிதாக  உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 104 க்கு உயர்ந்தபோது அரை சதம் கடந்திருந்த இளம் வீரர் தவான், மார்ட்டின் பந்தில் சிம்மன்ஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து ரோகித் சர்மாவுடன் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் எண்ணிக்கை 184 க்கு உயர்ந்தபோது சுரேஷ் ரெய்னா 43 ரன்கள் எடுத்த நிலையில் மார்ட்டின் பந்தில் சிம்மன்ஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 10 ரன்களை எடுத்த நிலையில் ராம்பாலிடம் காட் அண்டு போல்டு முறையில் அவுட்டானார். தொடர்ந்து  44.5 ஓவர்களிலேயே 217 ரன்களை அடித்த இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி  வெற்றியை ருசித்தது. மிகச் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 68 ரன்களையும், ஹர்பஜன் சிங் 6 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றிகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பிரமாதமாக இருந்தது என்றார். சில வீரர்கள் பீல்டிங்கில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த  வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி, இன்னும் கூடுதலாக ரன் குவிக்க தவறியதே தங்கள் அணியின் தோல்விக்கு காரணம் என்றார்.  இந்திய அணியின் விக்கெட்டுகளை தொடர்ச்சியான இடைவெளியில் வீழ்த்தினாலும் தாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்