முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஹஜ் குழு பயிற்சி யாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.16 - தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் ஒத்துழைப்புடன், 15.6.2011 அன்று சென்னையிலுள்ள ஹஜ் இல்லத்தில் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டி உதவியுடன் இந்திய ஹஜ் குழு பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாமை நடத்தியது. சென்னையில் நடைபெற்ற இப்பயிற்சியில் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த 75 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இவ்வாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகளுக்கு பயிற்சியை அளிக்க இப்பயிற்சியாளர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவர் ஹஜ் பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு வழிமுறைகள் குறித்து ஹஜ் பயணிகள் புத்தறிவுப் பயிற்சி வழங்குவதன் மூலம் சிறப்பான முறையில் விளங்குகின்றனர். 

பல்வேறு மாவட்டங்களிலுள்ள பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு சுமார் 20 மையங்களில் புத்தறிவுப் பயிற்சியை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு நடத்தி வருகிறது. ஹஜ் பயணிகள், பயணத்தின் பல்வேறு நிகழ்வுகள், முறைப்படுத்தப்பட்ட பயணச் சுமைகளை உபயோகிப்பதன் அவசியம், உணவுப் பொருட்களை கொண்டு செல்வதைத் தவிர்த்தல், சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் காலத்தில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஆகியன குறித்து ஹஜ் பயணிகளுக்கு புத்தறிவுப் பயிற்சிகளில் அறிவுறுத்தப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர், சுற்றுச்சூழல் மற்றும் ஹஜ் துறை அமைச்சர் சின்னையா இப்பயிற்சியினைத் துவக்கி வைத்தார்கள். மேலும் ஹஜ் குழுவிற்கு அளிக்கப்படும் நிர்வாக மானியம், ஹஜ் தொண்டர்கள், கட்டிடத் தேர்வுக் குழு ஆகியோரை அனுப்புவதற்கான செலவினம் முதலான ஹஜ் பயணிகளுக்காக தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு உதவிகள் குறித்தும் உரையாற்றினார்கள். தமிழ்நாட்டிற்காக கூடுதல் ஒதுக்கீட்டை அளிக்குமாறு இந்திய ஹஜ் குழுவின் முதன்மைச் செயல் அலுவலரை, அரசுச் செயலாளர் ஜி.சந்தானம் கேட்டுக் கொண்டார். 

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்காக தமிழக அரசால் அளிக்கப்படும் உதவிகள் முதலியவற்றிக்காக தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவர் மற்றும் இந்திய ஹஜ் குழுவின் துணைத் தலைவர் ஹாஜி அபூபக்கர் நன்றியைத் தெரிவித்தார்.

ஜித்தாவிலுள்ள இந்திய உதவித்தூதர், பைஜ் அஹமது கித்வாய், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவர் மற்றும் இந்திய ஹஜ் குழுவின் துணைத்தலைவர் ஹாஜி அபூபக்கர், இந்திய ஹஜ் குழுவின் முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் ஷாகிர் உசேன், இந்திய ஹஜ் குழுவின் துணை முதன்மைச் செயல் அலுவலர் ரூஹி கான் ஆகியோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டு ஹஜ் 2011-ல் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஏற்பாடுகள் குறித்தும் சவூதி அரேபியாவில் பயணிகள் தங்கும் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய இதர நடைமுறைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றினார்கள். தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் உறுப்பினர் மற்றும் செயல் அலுவலர் கா.அலாவுதீன் மற்றும் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டியின் செயலாளர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவரையும் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்