முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு சங்கங்கள் மோசடிகளை களைய நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.12 -  3 ஆண்டுகளுக்கு நிலுவை இல்லாமல் திறம்பட செயல்படும் விசைத்தறி சங்கங்களுக்கே இலவச வேட்டி- சேலை தயாரிக்க ஆர்டர்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- 

இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 95 சதவிதம் கொள்முதல் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பெறப்படுகிறது.  இந்த விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் நூல் மற்றும் ரொக்க முன் பணத்தை கோ​ஆப்டெக்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்று அதனை சேலைகளாகவோ அல்லது வேட்டிகளாகவோ நெய்து முன் பணத்தை சரிக்கட்டுதல் செய்கின்றனர்.  

ஆனால் கடந்த ஆண்டு மட்டும் ரூ.4.57 கோடி அளவிற்கு இந்த விசைத்தறி சங்கங்களிலிருந்து இன்றைய தேதி வரை சரிக் கட்டுதல் செய்யப்படாமல் இந்தத் தொகைகள் பெரும்பாலும் விசைத்தறி சங்கங்களிடம் நிலுவையிலுள்ளது.  கடந்த வாரம் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிக்கை இதுபோன்ற விசைத்தறி சங்கங்களில் பெரும்பாலான சங்கங்கள் வெறும் சங்கங்கள் என்ற செய்தியினை வெளியிட்டுள்ளது. இதனை பகுதியாக ஆமோதிக்கும் விதமாக உதவி இயக்குநர் (கைத்தறி), கோயம்புத்தூர் அவர்களுடன் கோ​ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் அவர்கள் ஆய்வு நடத்தியபோது இந்த சங்கங்களே இல்லை என்றும் இவை காணாமல் போய்விட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.  பொது மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் கோ​ஆப்டெக்ஸ் நிறுவனம் இதுபோன்ற திரும்பப் பெறாத முன்பணத் தொகைகளையோ அல்லது விலைக்கு வாங்கி தரப்படும் பருத்தி நூலையோ தருவது இனிவரும் காலங்களில் நடைபெறக் கூடாது என்று முடிவு செய்யப்படுகிறது,  இதன் அடிப்படையில் கோ​ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ஏற்படும் நட்டத்தைத் தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட உத்தரவு உடனடி நடவடிக்கைக்காக அமல்படுத்தப்படுகிறது.

1.விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் கோ-​ஆப்டெக்ஸால் பதிவு செய்யப்படும் முன்னர் அவற்றின் உறுப்பினர்கள் குறித்த முழு விவரங்களைப் பெற வேண்டும்.  உறுப்பினர்களின் முகவரிகள், மொபைல் / தொலைபேசி  எண்கள் கண்டிப்பாகப் பெறப்பட வேண்டும்.

2.முகவரிகளோ அல்லது மொபைல் / தொலைபேசி எண்களோ தரப்படாத எந்த உறுப்பினர்களும் உண்மையான உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

3.உதவி இயக்குநர் (கைத்தறி) அல்லது கோ​ஆப்டெக்ஸின் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைப் பார்வையிட்டதற்கான அத்தாட்சிகள் இணைக்கப்பட வேண்டும்.

4.சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் (கைத்தறி),  இந்த புதிய சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வேறு எந்த சங்கத்திலும் உறுப்பினர்களாக இல்லை என்று சரிபார்த்ததற்கான சான்றிதழ்களை தரவேண்டும்.  இது போலியாகத் தரப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் மீது துறை மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்படும்.

5.இவ்விதமாக சரிபார்த்த பின்னர் கோ-​ஆப்டெக்ஸில் பதிவு செய்யப்படும் விசைத்தறி சங்கங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு கடனுக்கு நூலோ அல்லது முன்பணமோ வழங்கப்பட மாட்டாது. 

 6.கோ​ஆப்டெக்ஸில் ஆர்டர் பெற வேண்டும் என்றால் நூலுக்கான தொகையை          100 சதவீதம் செலுத்தி அதன் அடிப்படையில் துணிகள் நெய்து தரலாம்.

7.3 ஆண்டுகளுக்கு நிலுவை இல்லாமல் திறம்பட செயல்படும் விசைத்தறி சங்கங்களுக்கு மட்டுமே நடப்பாண்டில் இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் ஆர்டர்கள் வழங்கப்படும்.  தொகை நிலுவை இருக்கும் பட்சத்தில் எந்த சங்கங்களுக்கும் இந்த ஆண்டு உத்தரவு வழங்கப்பட மாட்டாது.  8.பொதுவாக பதிவு செய்யப்படும் விசைத்தறி சங்கங்கள் மேற்கூறியவாறு நூல்களை முழுமையாக தொகையை செலுத்திப் பெற்று அதற்கான தொகையை    கோ​ஆப்டெக்ஸிற்கு தரப்படவில்லை என்றால் அவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு  கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும்.  கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும் எந்தவித சங்கங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கோ​ஆப்டெக்ஸ் எந்த பணிகளையும் வழங்காது.  கறுப்புப் பட்டியலில் வைப்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் தான் எடுத்துக் கொள்ளப்படும்.  அதாவது சம்பந்தப்பட்ட  விசைத்தறி சங்கங்கள்      கோ​ஆப்டெக்ஸில் நூலைப் பெற்று அதற்கான துணிகளைத் தரவில்லை என்றோ அல்லது முன்பணம் பெற்று உரிய நேரத்தில் துணிகளை வழங்கவில்லை என்று தெரிய வந்தாலோ இச்சங்கங்கள் தானாகவே கறுப்புப் பட்டியலுக்குள் கொண்டு செல்லப்படும்.

9.ஏற்கனவே பதிவு செய்து பணி செய்துவரும், சங்கங்களும், நூலையோ அல்லது முன்பணத்தையோ பெற்றுக்கொண்டு உரிய நேரத்தில் துணிகளை தரவில்லை என்றால் இச்சங்கங்களும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கறுப்புப் பட்டியலுக்குள் கொண்டு வரப்படும்.

மேற்கூறிய விதி முறைகளை கோ​ஆப்டெக்ஸில் உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்று இதன் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்