முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடரும்: முதல்வர்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 -பிற்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையினை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு சட்டம் 45 ற 1994 -ல் குறிப்பிட்டுள்ளவாறு 69 சதவீதம் இடஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிப்பது என்றும், இடஒதுக்கீட்டில் வளமான பிரிவினரை நீக்கப்பட வேண்டியதில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 11.7.2011-ல் வெளியிடப்பட்டது. 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-  

மண்டல் குழு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் 16.11.1992 அன்று வழங்கிய தீர்ப்பில், மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டினை விஞ்சக் கூடாது என்று ஆணையிட்டது.    இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்த ஏதுவாக, 1993 ஆம் ஆண்டு  தமிழக முதல்வர் ஜெயலலிதா  தலைமையிலான அரசால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களுக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவு 31.12.1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு சட்டமாகியது   (தமிழ்நாடு சட்டம் 45/1994).   பின்னர் இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 31ஆ​ன் கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு 1994 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் (76​வது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9​வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது. 

மேற்குறிப்பிட்ட தமிழ்நாடு சட்டம் 45/1994​ன் செல்லும் தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இப் பேராணை மனு எண்.454/1994 மற்றும் வளமான பிரிவினரை இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்குதல் குறித்து தாக்கல் செய்யப்பட்ட இப் பேராணை மனு எண்.194/2006 ஆகியவற்றில், உச்ச நீதிமன்றமானது, 69 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் வளமான பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து நீக்குதல் ஆகிய இரண்டு பொருள்கள் பற்றி தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையினை பெற்று 12.7.2011​க்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென்று முறையே 13.7.2010 மற்றும் 3.1.2011 ஆகிய தேதிகளில் ஆணையிட்டது.  

அவ்வாறு பிறப்பித்த ஆணையில், ஒரு மாநிலம் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இட ஒதுக்கீடு செய்ய முனையும் போது, அதனுடைய ஆணையானது எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களின் அடிப்படையில், அம்மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் பிறப்பிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  அதன் அடிப்படையில், எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்கள் அரசால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டன.  மேலும் ஆணையம் கோரிய பல்வேறு விவரங்கள், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள்  மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டு ஆணையத்திற்கு அரசால் அனுப்பி வைக்கப்பட்டன.  இட ஒதுக்கீட்டின் அளவு மற்றும் வளமான பிரிவினரை நீக்கம் செய்வது ஆகியன குறித்து எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களை ஆய்வு செய்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மேற்காணும் பொருள் குறித்த தனது அறிக்கையினை 8.7.2011 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தது.  

அவ்வறிக்கையில், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு சட்டம் 45/1994 எவ்வித குறைபாடும் இன்றி உள்ளது என்றும், எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 விழுக்காடு, மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பினருக்கு 20 விழுக்காடு, ஆதி திராவிடர் வகுப்பினருக்கு 18 விழுக்காடு மற்றும் பழங்குடியினருக்கு 1 விழுக்காடு என்று வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் அளவு, மேற்படி வகுப்பினருடைய மக்கட்தொகையைக் கணக்கில் கொள்ளும் போது முற்றிலும் சரியானது என்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.  

மேலும், 17 ஆண்டு காலமாக அமலில் இருந்து வரும் தமிழ்நாடு சட்டம் 45/1994​ன் அமலாக்கத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டிலிருந்து வளமான பிரிவினரை நீக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த அறிக்கை, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 11.7.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் 8.7.2011 அன்று தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையினை  ஏற்றுக் கொள்வது என்றும், அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டம் 45/1994​ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது என்றும், இட ஒதுக்கீட்டில் வளமான பிரிவினரை நீக்கம் செய்ய வேண்டியதில்லை என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டம் 45/1994​ஐ தொடர்ந்து நடைமுறைப் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 11.7.2011 அன்று வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையின்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினருக்கு 20 விழுக்காடு, ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு, ஆக மொத்தம், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு, வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.  இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony