காங்கிரஸ் அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது - கோகுல இந்திரா

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
karaikudi admk2

 

காரைக்குடி,மார்ச். - 2 - தமிழ்நாட்டில் நிலவும் மோசமான நிலையை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காளிதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சோழன் சித பழனிச்சாமி முன்னிலை வகித்தார். மாநில மகளிரணி செயலாளர் கோகுல இந்திரா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோகுல இந்திரா பேசியதாவது, 

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் இமாலய ஊழலால் இந்தியா உலக அளவில் தலைகுனிய நேரிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் கருணாநிதி குடும்பத்திற்கு சென்றடைந்தது தெள்ளத் தெளிவாகி விட்டது. முதல்வர் பதவியில் இருக்கும் கருணாநிதி தன் குடும்ப சுகத்திற்காக மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் முதலிடம் வகித்த தமிழகம் இன்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. தினமும் கொள்ளை, கொலை, லஞ்சம், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என தமிழக மக்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர். 

காரைக்குடியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பத்திரப் பதிவு நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்குவதற்கு இப்பகுதி வாழ் மக்களுடன் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. தடைபட்ட காலம் முதல் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் செய்தவர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இத்தொழில் முற்றிலுமாக இப்பகுதியில் நலிவடைந்து விட்டது. ஆனால் தேர்தல் வரப் போகிறது என்ற காரணத்தினால் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் யார் நின்றாலும் வர முடியாது என்ற எண்ணத்தால் இப்பகுதியில் பத்திரப் பதிவு தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு செய்தால் மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும், எம்.எல்.ஏ சுந்தரமும் நினைக்கின்றனர். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். 

காங்கிரசார் தி.மு.க.வுடன் இணைந்திருக்க வேண்டாம். அப்படி இணைந்தால் அழிந்து விடுவீர்கள் என்று ஜெயலலிதா அன்றே சொன்னார். காங்கிரசார் கேட்கவில்லை. ஆனால் தி.மு.க.வால் காங்கிரஸ் அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகி விட்டது. பத்திரப் பதிவு தடை நீக்கம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம் என்று கூறியவுடன் உடனடியாக தடை நீக்கம் செய்துள்ளனர். அதனையும் அமைச்சர் ப. சிதம்பரமும், எம்.எல்.ஏ சுந்தரமும் செய்து விட்டனர் என்று கூறுகின்றனர். இதனை 2 தினங்கள் கழித்து அறிவிக்க முடியாது என்ற காரணத்தால் உடனடியாக செய்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சோழன் சித பழனிச்சாமி, குணசேகரன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏக்கள் உமாதேவன், கற்பகம் இளங்கோ, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், எம்.ஜி.ஆர். மன்றம் தேர்போகி பாண்டி, இளைஞரணி பூராவயல் ராமு, சின்னையா அம்பலம், ஊராட்சி மன்ற தலைவர் மந்தக்காளை, பொதுக்குழு உறுப்பினர் ஜாக்குலின் அலெக்ஸ், ஒன்றிய இளைஞரணி செயலர் ரவிச்சந்திரன், குழந்தை வேலு, எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் அய்யாசாமி, நாகலிங்கம், பூப்பாண்டியன், கவுன்சிலர்கள் அங்குராஜ், சேதுபதி, அருள்முருகன், கணேசன், கல்லல் ரவி, நல்லதம்பி, ராமு, தென்கரை சுப்பிரமணியன், அரியக்குடி மோகன், செல்லையா, குணசேகரன், ஆனந்தன், காளையார்கோவில் பழனிச்சாமி, நகர செயலாளர்கள் மெய்யப்பன், புதுவயல் நைனாமுகமது, சிவகங்கை ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் சங்குபாண்டி, அண்ணாநகர் சுப்பிரமணி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சிரஞ்சீவி சீனிவாசன், பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: