தூத்துக்குடி - அஞ்சு கிராமம் இடைய கி.க. சாலை விரிவாக்கம்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.8 - சென்னையிலிருந்து தூத்துக்குடிவரை போடப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலை பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் வரை 113 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.257 கோடி செலவில் விரிவுபடுத்த உள்ளதாக சட்டமன்ற பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110​ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் பல்வேறு உள்கட்டமைப்புகளில் சாலை உள்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  தொழில், சாலைப் போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளின் வேகமான வளர்ச்சிக்கு சாலைக் கட்டமைப்பின் வளர்ச்சி அடிப்படையாக உள்ளது. ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சாலை இணைப்பு வசதி முக்கியமான ஒன்றாக அமைகிறது.  ஒரு மாநிலத்தில் உள்ள ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பினைக் கொண்டே அம்மாநிலத்தின் வளர்ச்சியைக் கணிக்க இயலும். மாநிலத்தின் தற்போதைய சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமான அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள எனது தலைமையிலான அரசு சாலை கட்டமைப்பின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.  

இதன் அடிப்படையில், சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை, பல்வேறு கட்டங்களில், ஆசிய வங்கி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் அகலப்படுத்தப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டது.  தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரியில் வசிக்கும் மக்கள் nullநீண்ட நாட்களாக இந்தச் சாலையை கன்னியாகுமரி வரை nullநீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.  இந்தச் சாலையினால் ஏற்படும் பயன்களைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் வரையில் உள்ள 113 கிலோமீட்டர் சாலைப் பகுதி 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழித் தடமாக அகலப்படுத்தப்பட்டு மேம்பாடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தச் சாலைப் பணியின் கீழ், 9 புறவழிச் சாலைகள், 3 பெரிய பாலங்கள் மற்றும் 1 ரயில்வே மேம்பாலம் ஆகியவை அமைக்கப்படும்.

இதே போன்று, சிவகங்கை மற்றும் எடப்பாடி நகரங்களில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படக் கூடிய பாதிப்பை பெருமளவில் குறைக்கும் வகையில், 10.60 கிலோ மீட்டர் nullநீளத்தில் சிவகங்கை புறவழிச் சாலையும்; 8.60 கிலோ மீட்டர் nullநீளத்தில் எடப்பாடி புறவழிச் சாலையும் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதற்காக, நடப்பாண்டில், சிவகங்கை நகரத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; எடப்பாடி நகரத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.  ரயில்வே கடவுகளில் சாலை மேம்பாலங்கள் / கீழ்பாலங்கள் கட்டுவதால் தடையில்லாப் போக்குவரத்து உறுதி செய்யப்படுவதுடன், விபத்துகளும் தவிர்க்கப்படும்.  

இதனால் பயண நேரமும் வெகுவாகக் குறையும். இதற்காக சாலைகளில் இருப்புப் பாதை குறுக்கிடும் சாலைகளில் ரயில்வே பணித் திட்டம் 2011-12 இன் கீழ், செலவு பகிர்வு அடிப்படையில், 740 கோடி ரூபாய் மதிப்பில், 23 புதிய ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் கட்டும் பணிகள் 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்.  காஞ்சீபுரம் மாவட்டத்தில் 4 பணிகளும்; திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பணிகளும்; வேலூர் மாவட்டத்தில் 4 பணிகளும்; விழுப்புரம் மாவட்டத்தில் 3 பணிகளும்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 பணிகளும்; சேலம் மாவட்டத்தில் 3  பணிகளும்; ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 1  பணியும் மேற்கொள்ளப்படும்.

பயண நேரத்தையும், தூரத்தையும் வெகுவாகக் குறைக்கும் நோக்குடன், இணைக்கப்படாத ஊர்களை இணைக்கும் வகையில், நபார்டு வங்கி நிதியுதவியுடன், 18 மாவட்டங்களில், 151 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 65 பாலங்கள், நடப்பாண்டில் கட்டப்படும்.  இந்தத் திட்டத்தின் கீழ், 8 புதிய பாலங்களும், 57 குறுகிய, பழுதடைந்த பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்களும் கட்டப்படும்.

நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் சாலைகள், பல்வேறு வகையான போக்குவரத்திற்கு உட்படுவதால், விபத்துகள் அதிகரிப்பதுடன், நெரிசலும் கூடுகிறது. ஆகவே, இந்தச் சாலைகளின் பராமரிப்பிற்கு தனி கவனம் செலுத்த வேண்டி உள்ளது.  இதன் முதற்கட்டமாக, சோதனை முறையில், சென்னையில் உள்ள அண்ணா சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை மற்றும் உள்வட்டச் சாலைகளை முழுமையாக, ஒருங்கிணைந்த முறையில் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த திட்டமிடும் பணி மேற்கொள்ளப்படும்.  பாதசாரிகள், இரு சக்கர வாகனங்கள், சிறு வாகனங்கள், பெரு வாகனங்கள் போன்ற அனைத்து விதமான போக்குவரத்து, பல்வேறு போக்குவரத்துகளுக்கு இடையிலான மாறுதல்கள், வாகன நிறுத்த வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், சாலைக் குறியீடு மற்றும் சமிக்ஞைகள்; பிற துறை சார்ந்த சேவைக் குழாய் வசதிகள்; மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்; சுற்றுப் புறத்தை பசுமையாக்குதலுக்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது திட்டமிடப்படும். இந்தத் திட்டம் விரைவில் தயாரிக்கப்பட்டு, இச்சாலைகள் மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்: