முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிநவீன துப்பாக்கிகள் வாங்க நிதி: முதல்வர்

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.10 - ஒலிம்பிக் துப்பாக்கிசுடும்போட்டியில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழக போலீசாருக்கு அதி நவீன துப்பாக்கிகள் வாங்க நிதி ஒதுக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அகில இந்திய அளவிலான 11​வது போலீஸ் துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளித்து முதல்​அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:​

1991​ம் ஆண்டு சென்னையில் அகில இந்திய போலீஸ் பணித்திறன் போட்டி நடந்தபோது நான் புதிதாக ஒரு பரிசுகோப்பையை ஏற்படுத்திய நிகழ்ச்சியை நினைவு கூறுகிறேன். அப்போது தமிழ்நாடு போலீஸ் துப்பாக்கி சுடும் பிரிவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கினேன். 2000, 2004, 2009 ஆண்டுகளில் தமிழக போலீஸ் அணி துப்பாக்கிசுடும் போட்டியில் பரிசு கோப்பையை பெற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

தற்போது மீண்டும் அந்தகோப்பையை தமிழ்நாடு பெற்றிருப்பதை எண்ணி மேலும் மகிழ்கிறேன். 1991​ம்ஆண்டு நான் முதல் அமைச்சராக பொறுப்பேற்றபோது தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தடுக்க போதுமான ஆயுதங்கள் இல்லாமல் தமிழக போலீஸ் இருந்ததை உணர்ந்தேன்.

அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்கப்படவேண்டிய 2​ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளே போலீசாரிடம் இருந்தன. ஆனால் அதே நேரத்தில் தீவிரவாதிகள் அதி நவீன ஆயுதங்களை வைத்திருந்தனர். அப்போது நான் டெல்லி சென்றநேரத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், உள்துறை மந்திரி எஸ்.பி.சவான், நிதி அமைச்சர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்து தமிழக போலீஸ் துறையை நவீனப்படுத்த குறைந்தபட்சம் ரூ.30 கோடியாவது நிதி ஒதுக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தேன்.

மத்திய அரசு கொஞ்சம் நிதி கொடுத்தது. அதைவைத்து ஓரளவுக்கு போலீஸ் துறையை நவீனப்படுத்தினேன்.

போலீசாருக்கு ஏ.கே.47 உள்ளிட்ட நவீன துப்பாக்கிகள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள், நவீன வாகனங்கள் வாங்கப்பட்டன.

இவ்வாறு தமிழக போலீஸ்துறை நவீனமாக்கப்பட்டதை பார்த்து இதர மாநிலத்தினரும் தங்கள்போலீஸ் துறையை நவீனப்படுத்த நிதி கேட்க ஆரம்பித்தன.இவ்வாறு போலீஸ்துறையை நவீனமாக்கும் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது தமிழகம்தான்.

போலீஸ்துறையை நவீனமாக்குவதற்கு வித்திட்டது நான் தான் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.

நவீன ஆயதங்களை வாங்குவதுடன் எல்லாம் முடிந்துவிடாது.அத்தகைய நவீன ஆயுதங்களை திறமையாக கையாளுவதுதான் முக்கியம். துப்பாக்கியை கையாளுவது சாதாரண விஷயம் அல்ல. அது நுட்பமான செயலாகும். தீவிரவாதிகளை போலீசார் குறிபார்த்து நுட்பமாக சுட்டு அப்பாவி மக்களை எவ்வித ஆபத்தும் இல்லாமல் பாதுகாத்திடவேண்டும். பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் சிலரை பிடித்துவைத்திருக்கும் சூழ்நிலையில், போலீசார் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தக்கூடாது. அதுபோன்ற நேரத்தில் பிணைக்கைதிகளையும், அப்பாவி மக்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியவேண்டும். அந்தநேரத்தில் ஒரு வினாடியில் போலீசார் எடுக்கும் முடிவு அப்பாவி மக்களின் வாழ்க்கையையும் மரணத்தையும் முடிவு செய்யும்.

இந்த ஆண்டு துப்பாக்கிசுடும் போட்டியில் 9 பெண் போலீசார் கலந்து கொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் 1992​ம்ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நான் தான் முதல் முதலாக தொடங்கினேன்.

அதைப்போல முதல் முதலாக பெண் கமோண்டோ போலீஸ் பிரிவை தொடங்க உத்தரவிட்டதும் நான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

போலீசாரின் வாழ்க்கை ரோஜா மலர்கள் நிறைந்த படுக்கை அல்ல. காலையில் பணிக்காக வெளியே செல்லும்போலீசார் இரவில் வீடு திரும்புவார்களா என்பது உத்தரவாதம் கிடையாது. ஏதாவது தீவிரவாதிகள் தாக்குதல் என்றால் போலீசாரின் நிலைமைப்பற்றி சொல்லத்தேவையில்லை.

சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் போலீசார் வாகனங்கள்மோதி பலியாகி தன் குடும்பத்தினரை தவிக்கவிட்டு செல்லும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.

ராணுவத்தினரும் போலீசாரும் நாட்டுமக்களை பாதுகாக்கும் பாதுகாவலர்கள். வசதிகளும், ஊக்கமும் அளிக்கப்பட்டால் தமிழக போலீசார் உலகில் உள்ள எந்த சிறந்த போலீசாருக்கும் இணையாக செயல்படுவார்கள்.

ஆயுதங்களை போலீசார் கையாளும் திறனை பரிசோதிப்பதற்காக இத்ததைய துப்பாக்கி சுடும்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதேபோல 2007​ம் ஆண்டில் இருந்து அகில இந்திய போலீஸ் விளையாட்டு துப்பாக்கிசுடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இது ஒலிம்பிக்கில் நடத்தப்படும் துப்பாக்கி சுடும் போட்டியை போன்றதாகும். இதற்கு .177 அல்லது .22 பிஸ்டல்கள், துப்பாக்கிகள் தேவை. ஆனால் இதெல்லாம் தமிழ்நாடு போலீசில் இல்லை. எனவே தமிழக போலீசார் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும்போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறும் வகையில் இத்தகைய நவீன துப்பாக்கிகள் வாங்க தேவையான நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் மூலம் துப்பாக்கி சுடும் திறனை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்