முக்கிய செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம் இல்லை

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      அரசியல்
TnElection1

 

சென்னை, மார்ச்.4 - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தமிழக சட்டசபை தேர்தல் தேதி குறித்து நிலவும் அதிருப்தி பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:​ பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தும், பல்வேறு சூழ் நிலைகளையும் ஆய்வு செய்து தான் மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. மேற்கு வங்காளம், அசாமில் பல கட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஒரே கட்சி பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும். அதில் பிரசாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவேதான் இந்த தேதியை நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏப்ரல் 13-ந்தேதி தேர்தல் நடக்கவில்லை. கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலத்திலும் இதே தேதியில் தான் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிந்த பிறகே எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி ஓட்டு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்பதற்காக ஓட்டு எண்ணிக்கை தேதி மே 13 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கேள்வி:​ தமிழ்நாட்டில் பள்ளி தேர்வு நடப்பதால் மாணவர்களை பாதிக்கும். எனவே தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளதே? நீங்கள் தேர்தல் தேதியை மாற்ற ஏதாவது சிபாரிசு செய்ய இருக்கிறீர்களா? 

பதில்: ​ எனக்கு அது தொடர்பான கோரிக்கைகளோ, புகார்களோ வர வில்லை. பள்ளி மாணவர்களை பாதிக்காத வகையில் தேர்தல் பிரசாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மையங்கள் அருகே பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படும். 

கேள்வி:​ தேர்தல் தேதியை மாற்ற வாய்ப்பு உள்ளதா? 

பதில்:​ எல்லாவற்றையும் பரிசீலித்துதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை மாற்ற வாய்ப்பு இல்லை. இதற்கு மேல் இதில் எதுவும் சொல்ல முடியாது. 

கேள்வி:​ இந்த சட்டசபை தேர்தலை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? பதில்:​ இது சவால் நிறைந்ததாக இருக்கும். நவீன தொழில் நுட்பங்கள் உள்ளன. எனவே நல்லமுறையில் தேர்தலை நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: