முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சியில் வார்டுகளில் அதிமுக வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.22 - மதுரை மாநகராட்சியில் வார்டுகளில் அதிக வார்டுகளை அதிமுக பெற்று அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொண்டர்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.  மதுரை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு கடந்த 17 ம் தேதியும், ஊரக பகுதிகளில் 19ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஊரக பகுதியான மதுரை கிழக்கில் பதிவான வாக்குகள் ஒத்தக்கடையிலுள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்திலும், மதுரை மேற்கில் பதிவான வாக்குகள் திருப்பாலை யாதவா கல்லூரியிலும், திருப்பரங்குன்றத்தில் பதிவான வாக்குகள் திருநகரிலுள்ள சீதாலட்சுமி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், மேலூரில் பதிவான வாக்குகள் தாய் பாலிடெக்னிக் கல்லூரியிலும், அலங்கா நல்லூரில் பதிவான வாக்குகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உசிலம்பட்டியில் பதிவான வாக்குகள் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் செல்லம்பட்டியில் பதிவான வாக்குகள் கருமாத்தூரில் உள்ள அருளானந்தர் கல்லூரியிலும், சேடப்பட்டியில் பதிவான வாக்குகள் எஸ்.கோட்டைப்பட்டியிலுள்ள பராசக்தி மேல்நிலைப்பள்ளியிலும், திருமங்கலத்தில் பதிவான வாக்குகள் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், டி.கல்லுப்பட்டியில் பதிவான வாக்குகள் பேரையூர் காந்தி நினைவு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கள்ளிக்குடியில் பதிவான வாக்குகள் கே.வேளக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டன.

  நகராட்சி பகுதிகளான திருமங்கலம் நகராட்சியில் பதிவான வாக்குகள் திருமங்கலம் பிகேஎன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உசிலம்பட்டி நகராட்சியில் பதிவான வாக்குகள் கவுனம்பட்டி சாலையிலுள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியிலும், மேலூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் எஸ்எஸ்வி பிரைமரி பள்ளியிலும் எண்ணப்பட்டன.

  மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் மற்றும் வார்டு வேட்பாளர்களுக்கான வாக்குகள்  தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு துவங்கியது.  இதில் துவக்கத்தில்  இருந்தே அதிமுக மேயர் வேட்பாளர்  வி.வி.ராஜன்செல்லப்பா ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இதே போல் வார்டு கவுன்சிலர்களும் ஏராளமானோர் வெற்றி பெற்றனர்.   திமுகவுக்கு ஒற்றை இலக்கத்திலேயே வார்டுகள் கிடைத்தன. மீதமுள்ள அனைத்து வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியது. மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை மாவட்டத்தில் அதிமுக பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக 10 தொகுதிகளையும் பிடித்தது. இதே போல் உள்ளாட்சி தேர்தலிலும்  ஓரிரு வார்டுகளை தவிர மீதமுள்ள அனைத்து வார்டுகளையும், 3 நகராட்சிகளையும் அதிமுக கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளிலும் வெற்றி வாகை சூடியது அ.தி.மு.க. 

 

மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடியது. தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பெருவாரியான இடங்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சியில் பெரும்பான்மையான வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 நகராட்சிகளுக்கும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 3 நகராட்சிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடியுள்ளது. திருமங்கலம் நகராட்சி அதிமுக வேட்பாளர் உமாவிஜயன் 11 ஆயிரத்து 475 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலூர் நகராட்சி அதிமுக வேட்பாளர் செ.சரவணன் 11 ஆயிரத்து 569 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதே போல் உசிலம்பட்டி நகராட்சி அதிமுக வேட்பாளர் பஞ்சம்மாள் வெற்றி பெற்றது.

   வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களை கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மாலை அணிவித்து வாழ்த்தினர். தொண்டர்கள் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்