முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு முரளிமனோகர் ஜோஷி காட்டமான கடிதம்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.14- 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த மத்திய கணக்கு தணிக்கைக் குழு அறிக்கையை விமர்சித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவதால் கடும் கோபம் அடைந்துள்ள பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு காட்டமான ஒரு  கடிதத்தை எழுதியுள்ளார்.  2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் உள்பட 16 பேரைக் கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சி.பி.ஐ. விசாரணை ஒருபுறம் நடக்க பாராளுமன்ற பொதுக் கணக்கு குழுவும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை இக்குழுவின் தலைவரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி நடத்திவருகிறார்.  2 ஜி.ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு தலைவர் வினோத் ராய் தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் இந்த இழப்பு குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வினோத்ராய் மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக தாக்கிப் பேசிவருகிறார்கள். இது ஏன் என்று அந்த கடிதத்தில் ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து காங்கிரஸ் தலைவர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவதற்கு ஜோஷி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மத்திய கணக்கு தணிக்கைக் குழு அலுவலகத்தைச் சேர்ந்த ஆர்.பி.சிங் என்ற ஜுனியர் அதிகாரி 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு ரூ. 2,645 கோடிதான் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த அலுவலகத்தின் தலைவரான வினோத்ராய் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுவது எப்படி என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் நிருபம் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஆளாளுக்கு கருத்துக் கூறுவது வருத்தமளிப்பதாக உள்ளது என்று ஜோஷி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஆளும் கூட்டணியில் உள்ளவர்களும்கூட மத்திய கணக்கு தணிக்கைக் குழுவை தாக்கிப் பேசிவருகிறார்கள் என்றும் ஜோஷி சுட்டிக்காட்டி இருக்கிறார். பாராளுமன்ற பொது கணக்குக் குழு முன்பு சில நாட்களுக்கு முன்பு ஆஜரான வினோத்ராய், ஆர்.பி.சிங்  ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களால் அனுமதிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்