சமுதாயத்தில் பெண்கள் இன்னும் ஓரம் கட்டப்படுகிறார்கள் ஹமீத் அன்சாரி வருத்தம்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      இந்தியா
hamid ansari1 2

 

புதுடெல்லி,மார்ச்,- 9 - சமுதாயத்தில் பெண்கள் இன்னும் ஓரம் கட்டப்படுகிறார்கள் என்ற ராஜ்யசபை உறுப்பினர்களின் கவலையில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியும் பங்கேற்றுக்கொண்டார்.  உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு இந்தியாவில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாராளுமன்ற இரு சபைகளிலும் நேற்று பெண் எம்.பி.க்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 

உறுப்பினர்கள் சிலர் பேசும்போது சமுதாயத்தில் பெண்களுக்கு இன்னும் ஆண்களுக்கு நிகராக சமத்துவம் கிடைக்கவில்லை. கல்வியில் ஓரம் கட்டப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பெண்கள் சுகாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். உறுப்பினர்களின் கவலையை அப்போது சபையில் இருந்த துணை ஜனாதிபதியும் சபை தலைவருமான ஹமீத் அன்சாரியும் பகிர்ந்து கொண்டார்.

சமத்துவமின்மை, கல்வி, வேலைவாய்ப்பு சம்பளம், சுகாதாரம் ஆகியவற்றில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் இன்னும் கிரிமினல் மற்றும் வன்முறைக்கு உள்ளாகி வருகிறார்கள் பெண் குழந்தைகள், பெண் சிசுகள் இன்னும் கொல்லப்பட்டு வருகிறார்கள். வரதட்சணை கேட்டும் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்றும் ஹமீத் அன்சாரி வருத்தத்துடன் கூறினார். அரசியல் சட்டம் மற்றும் தார்மீக அடிப்படையில் மட்டுமல்லாது பெண்கள் பிரச்சினையை பொருளாதார ரீதியாகவும் அணுக வேண்டும் என்றும் அன்சாரி கேட்டுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: