முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு பாதுகாப்பு வழங்கும் ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.25 - 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்கும் ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என்று அமைச்சர் காமராஜ் கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி நெல் கொள்முதல், பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகிய விவசாயிகள் நலன் காக்கும், ஏழை எளிய மக்களின் பசிப் பிணியைப் போக்கிடும் திட்டங்களின் செயல்பாடு குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை மண்டல அலுவலகத்தில் நேற்று தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்றது.  

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலர் டி.என் இராமநாதன்,  குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கா.பாலசந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் முனைவர். தா. கார்த்திகேயன், அனைத்து மாவட்ட மண்டல மேலாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உணவுத் துறை அமைச்சர் தனது உரையில்,  தமிழக முதல்வர் 6 நாட்கள் முன்னதாக 6.6.11 அன்றே மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டதன் பயனாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கீழ்க்காணும் விதத்தில் பலனடைந்துள்ளனர்.

முன்னதாகவே பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நடவு, சாகுபடி பணிகள் முன்னதாகவே நடைபெற்றன.

இந்த வருட மகசூல் இரட்டிப்பானதில் விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறார்கள்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே அறுவடை பணிகள் நிறைவு பெற்றன.  இருப்பினும், ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் 17 சதவீதம் முதல் 20 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதின் பலனாக விவசாயிகள், நேரடி கொள்முதல் நிலையங்களில் தங்கள் நெல்லை விற்று பயனடைந்தனர்.

அதிக மகசூல் தரக்கூடிய 9 வகை நெல் 1.13 லட்சம் மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50​ம்,  சன்ன ரக நெல்லுக்கு ரூ. 70​ம்  வழங்கி ரூ.24.32 கோடி விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டதால் விவசாயிகள் இடைத்தரகர்கள், வியாபாரிகளை நாடிச் செல்லவில்லை.

ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வந்த விவசாயிகள் தற்போது இருபோக சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சாதனையாக நடப்பு குருவைப் பருவத்தில் 4.94 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.  30.11.11க்குள் இக்கொள்முதல் 5 லட்சம் மெ.டன்னைக் கடந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.                 இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை முதல்வர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறார்கள்.  கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மண்டல மேலாளர்களும் இனிவரும் காலங்களில் இப்பணி தொய்வின்றி சிறப்பாக அமைய அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பொது விநியோகத் திட்ட ஆய்வு குறித்துப்பேசிய அமைச்சர்  மாதம் ஒன்றுக்கு 3.21 லட்சம் மெ.டன் விலையில்லா அரிசி தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.  முல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புக் காவல் துறையினர் ஆகியோர் எடுத்த கடுமையான நடவடிக்கையின் காரணமாக ஜூன் 11 ம் மாதத்தில் 3.46 இலட்சம் மெ.டன்னாக இருந்த அரிசி நுகர்வு அக்டோபர் 11ல் 3.21 இலட்சம் மெ.டன்னாக குறைந்துள்ளது.  இருப்பினும் 26.9.11 அன்று சேலம் மாவட்ட அரிசி விநியோக கிடங்கிலிருந்து 30 மெ.டன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

மேலும் நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எடை குறைவின்றியும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதுடன், போலி பட்டியல்கள் தயார் செய்தல், இத்திட்டத்திற்கென வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கடத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.   மாவட்ட வழங்கல் அலுவலர்கள், போலி குடும்ப அட்டைகளைக் களைவதில் முனைப்புடன் செயல்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றுகை இனங்களில் முன்னேற்றம் காணப்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.  இந்திய துணைக் கண்டத்திலேயே விலையில்லா அரிசி தந்து 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்குகின்ற ஒரே மாநிலம் ஜெயலலிதா ஆளுகின்ற தமிழகம் மட்டும்தான்.  எனவே இத்திட்டத்தினை செம்மையாக நிறைவேற்றி முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் இயங்குகின்ற உணவுத்துறை சிறப்பாக செயல்பட அனைத்து அலுவலர்களும் அயராது பாடுபட வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தகவல் பரிமாற்றத்திற்கென அரியலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், ஆத்தூர், தண்டராம்பட்டு, குறிஞ்சிப்பாடி, திருவெறும்nullர், குத்தாலம், கடவூர், மடத்துக்குளம், ஆம்nullர் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு கைபேசி, சிம்கார்டு ஆகியவை உணவுத்துறை அமைச்சர் காமராஜால் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்