முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.4 - 5-ம் தேதி டில்லியில் நடக்கும் அதிகாரபூர்வ மற்ற கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது என்று தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி அறிவித்துள்ளார். இதுபற்றி விபரம் வருமாறு:- முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்ந்து கேரளா அரசால் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து உள்ளதாகவும் அதனால் அதை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று தீர்ப்பும் வந்தது. ஆனால் அன்றைய தி.மு.க. அரசு அதில் மெத்தனம் காட்டியதால், உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் கேரளா ஒரு அவசர சட்டத்தை இயற்றி பிரச்சினையை திசை திருப்பியது. மேலும், முல்லை பெரியாறு அணை உடைந்து லட்சக்கணக்கான மக்கள் பலியாவது போல் கிராபிக்ஸ் காட்சிகளை மலையாள இயக்குநர் ஒருவர் `டேம் 999' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி, அதை சமீபத்தில் வெளியிட்டார். அந்த படத்தை தமிழகத்தில் வெளியிட முதல்வர் ஜெயலலிதா தடை விதித்தார்.  

தற்போது இந்த பிரச்சினையில் கேரளா உள் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் பிரதமர் தலையிட்டு அறிவுறுத்தவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் இந்த பிரச்சினையில் குரல் எழுப்பின. இந்நிலையில் இந்த பிரச்சினை பற்றி பேச வரும் டிச.5-ம் தேதி ஒரு கூட்டத்தை மத்திய அரசு கூட்டுவதாக அறிவித்து தமிழகத்துக்கு அழைப்பு விடுத்தது. முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக நீதிபதி ஏ.எல். ஆனந்த் தலைமையிலான கமிட்டி முடிவு வர உள்ள நிலையில் அதிகாரபூர்வ மற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்பது வீண் என்பது அனைவரின் கருத்தாக எழுந்தது.

டிச.5 அன்று இதன் அடிப்படையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் நடைபெற உள்ள கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்